தேர்தல் ஆணையம் சிக்னல்: உச்சநீதிமன்றத்தில் ஜன 4-ல் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் திருப்பம்?
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை ஜனவரி 4-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையமானது இபிஎஸ் கோஷ்டிக்கு தொடர்ந்து அங்கீகாரம் அளித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுகள், உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னரே அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டிகளாக பிளவுபட்டது. சட்டசபை தேர்தலின் போது அதன் பின்னரும் இந்த பிளவு தொடர்ந்தது. இதன் உச்சமாக சென்னை வானகரத்தில் அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டியது. அப்பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்பொதுக் குழு கூட்டத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை11-ல் இபிஎஸ் கோஷ்டி கூட்டிய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது; அதிமுகவில் ஜூன் 23-ந் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் பெஞ்ச், நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்தனர்; அத்துடன் ஜூலை 11-ல் இபிஎஸ் கோஷ்டி நடத்திய பொதுக்குழு செல்லும் எனவும் தீர்ப்பு அளித்தனர். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், ஜூலை 11 பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது; அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்தோம். ஆனால் பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் ஆணையம் இந்த திருத்தங்களை பதிவேற்றம் செய்யவில்லை. ஆகையால் இந்த பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார். இவ்வழக்கின் விசாரணை ஜனவரி 4-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் இரு முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் இபிஎஸ் கோஷ்டி தாக்கல் செய்த வரவு செலவு கணக்குகளை ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்டிருக்கும் தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் கடிதம் அனுப்பி உள்ளது. தேர்தல் ஆணையம் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிப்பதானது, ஜனவரி 4-ந் தேதி நடைபெறும் உச்சநீதிமன்ற விசாரணையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால் ஜனவரி 4-ந் தேதி விசாரணை அதிமுகவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications