இரக்கமற்ற பாகிஸ்தான்.. பஞ்சாப்பில் பறந்த விமானத்தில் விழுந்த ஓட்டை.. 227 பயணிகள் தப்பியது எப்படி?
டெல்லி: டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் நோக்கி நேற்று முன்தினம் இண்டிகோ விமானம் 227 பயணிகளுடன் சென்றது. வானில் ஏற்பட்ட மோசமான வானிலை, ஆலங்கட்டி மழை உள்ளிட்டவற்றில் டர்புலன்ஸில் சிக்கியது. விமானத்தின் முன்பகுதி உடைந்த நிலையில் மக்கள் அலறினர். இந்த வேளையில் பாகிஸ்தானிடம் உதவி கேட்டபோது அந்த நாடு அனுமதி மறுத்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு விரைவாக செல்ல வேண்டும் என்றால் விமான பயணம் தான் முதன்மையான சாய்ஸாக உள்ளது. விமானப்பயணம் என்பது பாதுகாப்பானது தான். ஆனாலும் விமானம் பறக்க சரியான காலநிலை என்பது வேண்டும். மோசமான வானிலை என்பது விமான பயணங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

சில சமயங்களில் வானில் பறந்து கொண்டு இருக்கும்போது திடீரென்று மாறும் மோசமான வானிலை என்பது விமான பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடும். அப்படியொரு சம்பவம் தான் நேற்று முன்தினம் நடந்தது.
அதாவது நேற்று முன்தினம் மாலையில் டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு இண்டிகோ 6E - 2142 விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி சகாரிகா கோஸ் உள்பட மொத்தம் 227 பயணிகள் இருந்தனர். விமானம் பஞ்சாப் மாநிலத்தின் மேல்புறம் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோதே திடீரென்று வானிலை மாறியது. ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. அதேபோல் விமானத்தில் டர்புலன்ஸ் ஏற்பட்டது. இதனால் விமானம் குலுங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் அலற தொடங்கினர்.
இறுதியில் விமானி சாதுர்யமாக செயல்பட்டு அனைத்து பயணிகளையும் பத்திரமாக ஸ்ரீநகரில் தரையிறக்கினார். முன்னதாக மோசமான வானிலையை சமாளிக்க பாகிஸ்தான் வான்வெளி பரப்பை பயன்படுத்தி கொள்ள விமானி பாகிஸ்தானின் லாகூரில் உள்ள விமான கட்டுப்பாட்டு மையத்துக்கு எமர்ஜென்சி மெசேஜ் அனுப்பினார். ஆனால் நம் நாட்டுடன் தொடரும் மோதல் காரணமாக பாகிஸ்தான் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. ஈவு இரக்கமற்ற இந்த பாகிஸ்தானின் முடிவால் விமானி கடும் சவாலை எதிர்கொண்டார். ஆலங்கட்டி மழையில் விமானத்தின் முன்பகுதியில் ஓட்டை விழுந்தாலும் கூட விமானி சாதுர்யமாக செயல்பட்டு மோசமான வானிலையிலும் அனைத்து பயணிகளையும் பத்திரமாக ஸ்ரீநகரில் தரையிறக்கினார்.
இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து துறையின் இயக்குநரகம் (DGCA or Directorate General of Civil Aviation) பரபரப்பான விளக்கத்தை அளித்துள்ளது. இதுதொடர்பான விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் மே 21ம்தேதி மாலை 6.30 மணிக்கு பத்திரமாக ஸ்ரீநகரில் தரையிறங்கியது. இந்த விமானத்தின் முன்பகுதியில் ஓட்டை விழுந்துள்ளது. இந்த விமானம் பஞ்சாப்பில் பதான்கோட் அருகே பறந்து சென்று கெண்டிருந்தது. தரையில் இருந்து 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து சென்றது. அப்போது வானிலை மோசமானது. இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
டர்புலன்ஸை விமானம் எதிர்கொண்டது. விமானம் குலுங்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர். நம் நாட்டின் விமானப்படை கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு எமர்ஜென்சி செய்தி அனுப்பியது. பாகிஸ்தான் நோக்கி விமானத்தை இயக்க அனுமதி கோரியது. ஆனால் இருநாடுகள் இடையேயான மோதல் காரணமாக அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து விமானி பாகிஸ்தானின் லாகூரில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு எமர்ஜென்சி செய்தியை அனுப்பியது. மோசமான காலநிலையை சமாளிக்க பாகிஸ்தானின் வான்வெளி பரப்பை பயன்படுத்த அனுமதி கோரியது. ஆனால் பாகிஸ்தான் அனுமதி அளிக்கவில்லை. இந்த 2 அனுமதியும் வழங்கப்படாததால்
விமானி, விமானத்தை டெல்லி நோக்கி மீண்டும் திருப்ப நினைத்தார். ஆனால் திரும்ப பயணிக்க வேண்டிய பாதையில் காலநிலை மோசமாக இருந்தது. இடி, மின்னலுக்கான வாய்ப்பு இருந்தது. இதனால் டெல்லி நோக்கி திரும்ப பயணிப்பது ஆபத்தானதாக அமையும் என்பதால் அந்த முடிவை கைவிட்டார். அதன்பிறகு ஸ்ரீநகர் நோக்கி விரைவாக விமானத்தை இயக்க முடிவு செய்தார். குறுகிய நேரத்தில் ஸ்ரீநகரை அடையும் விமானப்பாதையில் விமானத்தை செலுத்தினார். இடி மின்னல் காரணமாக விமானம் இயக்குவதில் பெரும் சவால் இருந்தது. ஒரு கட்டத்தில் விமானம் நிமிடத்திற்கு 8,500 அடி வேகத்தில் கீழ்நோக்கி இறங்கியது. இருப்பினும் அதனை சமாளித்து விமானி ஸ்ரீநகரை நோக்கி சென்றார். ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து மையத்துக்கு எமர்ஜென்சி மெசேஜ் அனுப்பியது. அதன்பிறகு ரேடார் உதவியுடன் பயணிகளை பத்திரமாக தரையிறக்கினார். பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை'' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications