மாஸ் காட்டும் பாதுகாப்புத்துறை! இந்த ஆண்டு 13% கூடுதல் நிதி.. எந்தெந்த படைகளுக்கு எவ்வளவு தெரியுமா?
இந்த ஆண்டு முதன் முறையாக அக்னிபாத் திட்டத்திற்காக ரூ.4,266 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: சீனாவுடனான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் நாட்டின் பாதுகாப்பு துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கு ரூ.5.93 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 13 சதவிகிதம் அதிகமாகும்.
மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து அன்று மாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நடப்பாண்டின் வளர்ச்சி 6.8%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தது, விலைவாசி ஏற்றம் போன்றவை நடப்பு கணக்கு பற்றாக்குறையை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு வடகிழக்கு மாநிலங்கள், கர்நாடகா உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல அடுத்த ஆண்டு 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் பல புதிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல இந்த முறை பல்வேறு துறைகளுக்கு கணிசமாக நிதி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக
இதில் குறிப்பிடத்தக்கது பாதுகாப்பு துறையாகும். கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல், அதனைத்தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா தன்னுடைய கட்டமைப்பை விரிவாக்கியது போன்றவை இந்தியா-சீனா இடையேயான பதற்றத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல சமீபத்தில் அமெரிக்காவுடன் மேற்கொண்ட கூட்டு ராணுவ பயிற்சியும் சீனாவை எரிச்சலடைய செய்திருக்கிறது. எனவே எந்த சூழலுக்கும் தயாராக இருக்க இந்திய ராணுவம் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் நாட்டின் பாதுகாப்புதுறைக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது.

எந்த துறைக்கு எவ்வளவு
கடந்த ஆண்டு இத்துறைக்கு ரூ.5.25 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.5.93 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதன்முறையாக அக்னிபாத் திட்டத்திற்கு ரூ.4,266 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்திய விமான படைக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.0.57 லட்சம் கோடி(3.6% அதிகரிப்பு) உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு 0.37 லட்சம் கோடியும்(15% உயர்வு), கடற்படைக்கு 0.52 லட்சம் கோடியும், ஓய்வூதியங்களுக்காக 16 சதவிகிதமும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் விமானப்படைக்கதான் அதிக அளவு நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

குறைவு
மேலும், அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா எல்லையை விரிவுப்படுத்துவதைப் போல இந்தியாவும் தனது எல்லை பகுதியில் சீரான போக்குவரத்தை மேற்கொள்ள ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்லையில் சாலைகள் அமைக்கப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதற்காக ரூ.1,500 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல பாதுகாப்பு தடவாளங்களை உற்பத்தி செய்யும் 7 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ.1,310 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக பல துறைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய கடலோர காவல் படைக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள்
கடந்த ஆண்டு இத்துறைக்கு ரூ.7,310 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.7,197 கோடியாக இது சுருக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் கொள்முதலை பொறுத்த அளவில் பார்த்தால் ரூ.10,230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட 6.7% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications