பண்டிகைகளை வீடுகளில் கொண்டாடுங்கள்...தேவையற்ற பயணங்களை தவிருங்கள் - மத்திய அரசு
கூட்டம் கூடுகிற இடங்களுக்கு செல்லாதீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுங்கள். வீடுகளிலேயே இருங்கள். பண்டிகைகளை வீடுகளிலேயே கொண்டாடுங்கள் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி: பண்டிகை காலத்திலும், திருமண காலத்திலும் தொற்று பரவல் எழுச்சி பெறும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே இந்த மாதத்திலும், வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நவராத்திரி பண்டிகை தொடங்கி விட்டது. தீபாவளி, கிருஸ்துமஸ், தைப்பொங்கல் பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. கொரோனா இரண்டாவது அலையில் இருந்து மக்கள் மெதுவாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராகவே உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை வீசத் தொடங்கி விட்டது. தினசரி பாதிப்பு அமெரிக்காவில் 1 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. இந்தியாவில் பண்டிகைக்காலம் என்பதால் கவனமாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அலை ஓயவில்லை
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆகியோர் கொரோனா 2-வது அலை இன்னும் ஓயவில்லை. தற்போது பரவல் தட்டையாக உள்ளது. ஆனாலும் தினமும் சுமார் 20 ஆயிரம் பாதிப்புக்கு ஆளாவதாக கூறினர். தற்போதைய சூழலை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடக்கூடாது. தொற்றுநோய் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது.

கவனம் தேவை
நாம் கவனமாக இல்லாவிட்டால், விரும்பத்தகாத நிலைமை ஏற்பட்டு விடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
பண்டிகை காலத்திலும், திருமண காலத்திலும் தொற்று பரவல் எழுச்சி பெறும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே இந்த மாதத்திலும், வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

பயணங்கள் வேண்டாம்
கூட்டம் கூடுகிற இடங்களுக்கு செல்லாதீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுங்கள். வீடுகளிலேயே இருங்கள். பண்டிகைகளை வீடுகளிலேயே கொண்டாடுங்கள். 9 மாநிலங்களில் 34 மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கிறது. மிசோரம், கேரளா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் வாராந்திர பாதிப்பு 5 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.

வாராந்திர பாதிப்பு
கேரளாவில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். மற்ற 4 மாநிலங்களில் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். 12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 28 மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு 5 முதல் 10 சதவீதத்துக்குள் உள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 71 சதவீதத்தினர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். 27 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் தயார் நிலை
கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்தாலும் அதை சந்திக்கிற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளுக்காக தற்போது நாடு முழுவதும் 8.36 லட்சம் மருத்துவமனை படுக்கைகளும், பராமரிப்பு மையங்களில் கிட்டத்தட்ட 10 லட்சம் தனிமைப்படுக்கைகளும் உள்ளன. 4.86 லட்சம் ஆக்சிஜன் வசதியுடனான படுக்கைகள், 1.36 லட்சம் தீவிர சிகிச்சை படுக்கைகள் இருக்கின்றன. தினந்தோறும் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையில் புதிய பாதிப்புகள் வந்தாலும், சந்திக்க தயாராக இருக்கிறோம். நாட்டில் தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications