வடக்கில் இருந்து இந்தியாவை சூழும் ஆபத்து.. அதென்ன GLOF? பல ஆயிரம் பேர் உயிர் கூட போகலாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எங்கோ பூட்டானில் ஒரு பனிப்பாறை உடைந்தது இந்தியாவின் இரு மாநிலங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பூட்டானில் ஏற்படும் பாதிப்பு இந்தியாவை தாக்குவது ஏன்.. இதன் பின்னணி என்ன.. இதை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

இமயமலையில் உள்ள ஒரு பனிப்பாறை ஏரி உடைந்தால், அதன் பாதிப்பு இந்தியாவில் பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மக்களையும் தாக்கக்கூடும். இதற்கு உதாரணமாக, பூட்டானில் உள்ள ஷின்டாபு (Shintaphu) ஏரி உடைந்து வெளியேறிய வெள்ளம், இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Bhutan Glacial Lake Flood Threatens India Bhutan India

GLOF

இதையடுத்து ஆற்றின் கரையோரம் வசிக்கும் பல ஆயிரம் பேப்ர பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், இமயமலை பகுதிகளில் அதிகரித்து வரும் பனிப்பாறை ஏரி வெடிப்பால் ஏற்படும் வெள்ளத்தின் (Glacial Lake Outburst Flood - GLOF) ஆபத்தை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது.

பூட்டானில் உடைந்த ஷின்டாபு ஏரியிலிருந்து சுமார் 74 லட்சம் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியுள்ளது. இந்த நீர் மோ நதி வழியாக சங்கோஷ் நதியை நோக்கி பாய்ந்ததால், மேற்கு வங்கம் மற்றும் அசாமின் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உருவானது. இதையடுத்து மக்கள் ஆபத்தான இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

GLOF என்றால் என்ன

பனிப்பாறைகள் உருகும்போது, அதில் இருந்து வெளியேறும் நீர் மலை பகுதிகளில் தேங்கி புதிய ஏரிகளை உருவாக்குகிறது. இவை பெரும்பாலும் பனிக்கட்டி, பாறைகள் மற்றும் மண் கலந்த இயற்கையான தடுப்புகளுக்கு பின்னால் அமைந்திருக்கும். இந்த தடுப்புகள் திடீரென உடையும்போது, ஏரியில் தேங்கியிருக்கும் நீர் ஒரே நேரத்தில் பெருமளவில் வெளியேறுவதுதான் GLOF எனப்படுகிறது. அதாவது அணை உடைந்து நீர் வெளியேறுவது போல நீர் பாயும்.

சாதாரண வெள்ளத்தை போல இல்லாமல், இந்த வெள்ளம் மிக குறுகிய நேரத்தில் பெரும் வேகத்துடன் கீழ்நோக்கி பாயும். தண்ணீருடன் பாறைகள், மண், மரங்கள் உள்ளிட்டவை அடித்துவரப்படுவதால்.. பாலங்கள், சாலைகள், வீடுகள், அணைகள், நீர்மின் நிலையங்கள் என வழியில் உள்ள கட்டமைப்புகள் சர்வ நாசமடையும்.

இந்தியாவுக்கு ஏன் அதிக ஆபத்து?

இமயமலையில் இந்திய பகுதியில் பல ஆயிரம் பனிப்பாறைகளும் ஏரிகளும் உள்ளன. வெப்பநிலை உயர்வால் பனிப்பாறைகள் வேகமாக உருகி, ஏரிகள் பெரிதாகி வருகின்றன. இதனால் திடீரென நீர் வெளியேறும் அபாயமும் அதிகரிக்கிறது. 2020ல் Water Resources Research என்ற இதழில் இது குறித்து விரிவான ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய இமயமலை பகுதியில் உள்ள 329 பனிப்பாறை ஏரிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் சுமார் 22 சதவீத ஏரிகள் மிக அதிக ஆபத்தை கொண்டிருப்பதாக கண்டறிந்தது.

சிக்கிம், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், அருணாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவை. மலைப்பகுதிகளில் இருந்து வேகமாக பாயும் வெள்ளம், கீழே உள்ள பள்ளத்தாக்குகளில் வசிக்கும் மக்களையும் தாக்கும். ஆற்றங்கரைகளில் அமைந்துள்ள அணைகள், நீர்மின் திட்டங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் குடியிருப்புகளும் இதனால் ஆபத்தில் உள்ளன.

இப்படி தான் கடந்த 2023 அக்டோபரில் சிக்கிமின் தெற்கு லோனாக் ஏரி உடைந்ததில், தீஸ்தா ஆற்றுப் பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுபோல மேலும் சில சம்பவங்களும் நடந்துள்ளன. இதன் காரணமாகவே இந்த பனிப்பாறைகளால் ஏற்படும் GLOF இந்தியாவுக்கு ரொம்பவே ஆபத்தானதாக மாறியுள்ளது.

இந்த ஆபத்தை தடுக்க முடியுமா?

பனிப்பாறை ஏரி உடைவதை எப்போதும் தடுக்க முடியாது. ஆனால் சாட்டிலைட் மூலம் ஆபத்தான ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்கலாம். மேலும், முன்கூட்டியே வெள்ள எச்சரிக்கை விடுக்கும் சிஸ்டத்தை உருவாக்குவது, அதிக ஆபத்துள்ள ஏரிகளில் முன்கூட்டியே நீரை மெல்ல வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம். இதன் மூலம் வெள்ள பாதிப்பை குறைக்கலாம்.

பூடானில் ஏரி உடைந்தாலும் அதன் வெள்ளம் இந்தியாவை அச்சுறுத்துகிறது. இயற்கை பேரிடர்களுக்கு நாடுகளின் எல்லைகள் தடையாக இருப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.. எனவே, இமயமலை பகுதியில் உள்ள ஏரிகளை கண்காணிப்பது இப்போது காலத்தின் கட்டாயம் ஆகிறது. இல்லையென்றால் மோசமான பாதிப்பை நம்மால் தவிர்க்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+