நிர்மலா சீதாராமன் அங்கு இல்லவே இல்லை..பாஜகவினர் சர்ச்சையை உருவாக்குகிறார்கள்.. கார்த்தி சிதம்பரம்!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மூலம் பாஜகவினர் சர்ச்சையை உருவாக்க முயற்சிப்பதாக லோக் சபா உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபத்னி என லோக் சபா காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக பெண் எம்.பி.-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சோபா கரந்தலாஜே உள்ளிட்டவர்கள் தலைமையில் பாஜகவின் பெண் எம்.பி.-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டனர். அதோடு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர். இந்த போராட்டம் நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி, பாஜகவின் எம்.பி. ரமாதேவியை சந்தித்து பேசினார். அப்போது, இந்த விஷயத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார். இதில் என்னை ஏன் இழுக்கின்றனர்' என கேள்வி எழுப்பினார். அப்போது ஸ்மிருதி இரானி குறுக்கிட்டு பேச முற்பட்டபோது, சோனியா காந்தி கோபமாக, என்னிடம் நீங்கள் பேச வேண்டாம் என்று கூறியதாக தகவல் வெளியாகியது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பாஜக மூத்த தலைவர் ரமாதேவியிடம் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய சோனியா காந்தி வந்தபோது, பாஜக எம்.பி.-க்கள் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்தனர். அதேபோல் பாஜக எம்.பி. ஒருவரிடம் சோனியா காந்தி, நீங்கள் என்னிடம் பேச வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் லோக் சபா உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், லோக் சபாவில் என்ன நடந்தது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய அனைத்து தகவல்களும் தவறானது. உண்மையில் நிர்மலா சீதாராமன் சம்மந்தப்பட்ட இடத்தில் இல்லை. ஆனால் நான் அங்கு தான் இருந்தேன். பாஜகவினர் சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications