போராட்டக்காரர்களை அடையாளம் காண.. டெல்லி போலீஸ் எடுக்கும் புது முயற்சி! உளவு பார்க்கிறதா அரசு?
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையருக்கு எதிராக டெல்லி மற்றும் மும்பையில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இப்படி இருக்கையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பாடி கேமராக்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டங்கள் மத்திய அரசை ஒரு கை பார்த்திருக்கின்றன. இதற்கு முன்னர் தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்கியது ஜந்தர் மந்தர் போராட்டம்தான். ஆனால், அந்த போராட்டத்தில் போலீசார், போராட்டக்காரர்களிடம் அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை ஒரு பக்கம் மத்திய அரசு மறுக்க.. மறுபக்கம் போராட்டக்காரர்கள் தங்கள் செல்போனில் எடுத்த வீடியோக்களை ஆதாரமாக காட்டியிருந்தனர்.

மீண்டும் வெடித்த போராட்டம்
தற்போது மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்த போராட்டத்திலும் இதுபோன்ற பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக, போராட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் இருக்கும் காவலர்களுக்கும் பாடி கேமராக வழங்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
வழக்கறிஞர் சாஹத் ராகவ் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். மனுவில், "கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜந்தர் மந்தரில் நடந்த வன்முறை மற்றும் போலீசாரின் அத்துமீறல்கள் குறித்து டிஜிட்டல் ஆதாரங்கள் இல்லை. போராட்டக்காரர்களின் தரப்பில் போலீசார் அத்துமீறியதாக கூறப்பட்ட அதே வேளையில், போலீசார் தரப்பில் தம்மீது கற்கள் வீசப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
பொதுநல மனுத்தாக்கல்
எனவே எதிர்வரும் காலங்களில் இத்தகைய குழப்பங்களை தவிர்க்க டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடிப்படை வீரர்கள் போராட்டங்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும்போது உடலில் அணியும் கேமராக்களை (பாடி கேமரா) கட்டாயமாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.
பாடி கேமராக்கள் அவசியம்
இந்த கேமராக்களை எப்போது ஆன் செய்ய வேண்டும்? பதிவான வீடியோக்களை எங்கு? எப்படி பாதுகாக்க வேண்டும்? போன்ற நடைமுறைகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். இந்த வீடியோ பதிவுகள் நீதிமன்ற விசாரணையின்போது மாற்றியமைக்க முடியாத நம்பகமான டிஜிட்டல் ஆதாரங்களாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
நீதிமன்றம் சொன்ன பாயிண்ட்
இந்த பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி நிதின் சாம்பிரே தலைமையிலான அமர்வு, சட்டம் இயற்றுவது அல்லது நிர்வாக விதிகளை உருவாக்குவது அரசின் வேலை என்றும் இதில் நீதிமன்றம் தலையிட்டு அரசுக்கு நேரடியாக உத்தரவிட முடியாது என்றும் கறாராக சொல்லிவிட்டது. இருப்பினும் இந்த மனுவை ஒரு கோரிக்கை மனுவாக ஏற்றுக்கொண்டு உடலில் அணியும் கேமராக்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து மத்திய அரசு 6 மாதங்களுக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
எல்லாம் ஓகேதான். ஆனால், இப்படியான கேமராக்கள், போராடும் மாணவர்களை வேவு பார்ப்பதற்கும்.. போராட்டங்களில் பங்கேற்றவர்களை எளிதில் அடையாளம் காண்பதற்கும் பயன்படுத்தப்படலாம் என்று அச்சம் எழுந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
