தொடர் தோல்விகள்.. நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி.. அதிரடி மாற்றங்களுக்கு வாய்ப்பா?
டெல்லி: நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் தோல்வியை தொடர்ந்து நாளை டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரியகமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட உள்ளதோடு, செப்டம்பரில் நடைபெற உள்ள காங்கிரஸ் உட்கட்சி தேர்தலை முன்கூட்டி நடத்துவது, கட்சிக்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது.
கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களில் பாஜகவிடம் வெற்றி வாய்ப்பபை நழுவ விட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. அங்கு கட்சி படுபாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.

ஓட்டு சதவீதம் குறைவு
சோனியா காந்தியின் மகளும், ராகுல்காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி தான் காங்கிரஸ் சார்பில் உத்தர பிரதேசத்தில் தேர்தலை முன்னெடுத்தார். ஏராளமான பேரணி, பொதுக்கூட்டங்களை அவர் நடத்தினார். ராகுல்காந்தியும் அவருக்கு பக்கபலமாக இருந்தார். இருப்பினும் 403 தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஓட்டு சதவீதம் ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது. வெறும் 2.4 சதவீத மக்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்துள்ளனர்.

விசுவாசிகளின் பயம்
உத்தர பிரதேசம் உள்பட இந்த 5 மாநில தேர்தல் தோல்விகள் காங்கிரஸ் கட்சியை கலங்கடிக்க செய்துள்ளது. காங்கிரஸ் தலைமை மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் காங்கிரஸ் இல்லாத நாடாக இந்தியாவை விரைவில் மாறிவிடுமோ என காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசிகள் பயப்படுகின்றனர்.

சீர்த்திருத்தம் அவசியம்
இதற்கிடையே 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்சிக்கு நிரந்தர தலைமை வேண்டும் எனக்கூறி அதிருப்தியாளர்களாக மாறிய மூத்த தலைவர்கள் அடங்கிய ஜி23 குழுவினர் டெல்லியில் உள்ள குலாம் நபி ஆசாத் வீட்டில் ஆலோசனை நடத்தினர். முன்னதாக மூத்த காங்கிரஸ் தலைவர் சசீதரூர் டுவிட்டர் மூலம் விமர்சனம் செய்திருந்தார். அதாவது ‛‛காங்கிரஸ் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கட்சியின் தலைமையைச் சீர்திருத்த வேண்டும். இது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். நாம் வெற்றிபெற வேண்டுமானால் கட்சியில் சீர்த்திருத்தம் அவசியம். கட்சியில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது" என்று பதிவிட்டுள்ளார்.

காரியகமிட்டி கூட்டம்
இந்நிலையில் தான் டெல்லியில் நாளை மாலை 4 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் காரியகமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமை வகிக்க உள்ளார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப சிதம்பரம், மல்லிகார்ஜூன கார்கே உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

என்ன முடிவுகள்
இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து முழுமையாக விவாதிக்கப்பட உள்ளது. மேலும் தொடர் தோல்வியில் இருந்து மீண்டு கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள காங்கிரஸ் உள்கட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்தும், கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிப்பது பற்றியும் இந்த கூட்டத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications