இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா.. அப்ப இந்தியாவில் 3ஆவது அலை உச்சம் பெறுமா?
டெல்லி: இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை தீவிரமடையுமா என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. ஏற்கெனவே இரு அலைகளை சந்தித்த நிலையில் தற்போது 3ஆவது அலையை இந்தியா எதிர்நோக்கியுள்ளது.
முதல் அலையின் போது இந்தியாவில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் இருந்தாலும் அந்தளவுக்கு வெளியே தெரியாமல் இருந்து வந்தது. ஆனால் இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி போட்டுவிட்டது.

நோயாளிகள்
இந்தியாவில் இரண்டாவது அலையால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து அனைவரும் ஒரே நேரத்தில் மருத்துவமனையில் திரண்டதால் அங்கு படுக்கை வசதி இல்லாமல் திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டது. அவ்வாறு படுக்கை வசதிகள் நிரம்பி வழியும் மருத்துவமனைகளின் வெளியே ஆம்புலன்ஸில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மூச்சுத் திணறல்
எனினும் நோயின் தீவிரம் அதிகமாகி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டு நிறைய பேர் இறக்க நேரிட்டது. இந்த நிலையில் தற்போது 2ஆவது அலையின் தீவிரம் குறைந்துள்ளது. இந்தியாவில் 3ஆவது அலை அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பரில் தொடங்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கேரளா
இதனிடையே இந்தியாவில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் 3ஆவது அலை உச்சத்தை எட்டும் என தெரிகிறது. அதற்கேற்றாற் போல் தற்போது இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இங்கிலாந்தில் கடந்த திங்கள்கிழமை அன்று 49,156 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவானவர்களே கொரோனாவின் இரு தவணை தடுப்பசிகளையும் செலுத்தியுள்ளனர். கொரோனா வருவதற்கு முன்னர் இங்கிலாந்து எப்படி இருந்ததோ தற்போது அப்படியிருக்கிறது. இதுதான் அங்கு கேஸ்கள் அதிகரிக்க காரணம் என சொல்லப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் அதே தான் பயணத் தடை திரும்ப பெறுவது உள்ளிட்ட பல்வேறு தடைகள் திரும்ப பெறப்பட்டதால் அங்கும் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன. இது மூன்றாவது அலையின் தாக்கம் என்றே தெரிகிறது. இதனால் இந்தியாவில் 3-ஆவது அலை வேகமாக பரவிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இங்கிலாந்து
இதற்கு காரணம், கடந்த முறை 2-ஆவது அலையின் போது இங்கிலாந்தில் கேஸ்கள் அதிகரிக்கத் தொடங்கியதால் இந்தியாவிலும் கொரோனா 2-ஆவது அலை உச்சம் பெற்றது. இங்கிலாந்தை போல் இந்தியாவிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் கொரோனாவை மறந்து விதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு சுற்றுகிறார்கள். இதனால் இங்கிலாந்தை போல் இந்தியாவில் மூன்றாவது அலை உச்சம் பெறுமா என்ற எண்ணம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் மக்கள் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications