இந்தியாவில் கொரோனா புதிய உச்சம் - ஒரே நாளில் 1,16,836 பேருக்கு பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 1,16,836 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 200 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வீரியமடைந்துள்ளது. மூன்றாவது அலையின் வேகம் ஆரம்பத்திலேயே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,16,836 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 200 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது.
இந்தியாவில் கொரோனா முதல் அலையில் பாதிப்பு குறைவாக இருந்தாலும் இரண்டாவது அலையின் வேகம் மிகத்தீவிரமாக இருந்தது. நாடுமுழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. கடந்த மே மாதத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் அதிகரித்தது. உயிரிழப்புகளும் அதிகரித்தது. இந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்ததால் கொரோனா படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது.
செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கொரோனா படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரைக்கும் தினசரி கொரோனா தொற்று 10 ஆயிரத்திற்கும் கீழே பதிவாகி வந்த நிலையில் மளமளவென உயர்ந்து தினசரி பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் மேல் பதிவாகியுள்ளது.

கொரோனா பரவல் தீவிரம்
நவம்பர் மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் பரவத் தொடங்கிய ஓமிக்ரான் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாடுகளில் பரவத் தொடங்கியது. அமெரிக்காவில் 7 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் பண்டிகை கொண்டாட்டங்களின் விளைவாக தினசரி பாதிப்பு 2 லட்சத்திற்கும் மேல் பதிவாகியுள்ளது. ரஷ்யாவிலும் கொரோனாவால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் புதிய உச்சம்
இந்த நிலையில் இந்தியாவிலும் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 200 நாட்களுக்குப்பிறகு ஒரே நாளில் 1,16,836 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,52,25,699 பேராக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் தீவிரம்
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 36,265 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்காளத்தில் 15,421 பேரும் டெல்லியில் 15,097 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் தொற்றினால் நாடு முழுவதும் 2,630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 797 பேரும் டெல்லியில் 465 பேரும் ராஜஸ்தானில் 236 பேரும் கேரளாவில் 280 பேரும் கர்நாடகாவில் 226 பேரும் குஜராத்தில் 204 பேரும் தமிழகத்தில் 121 பேரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications