’டெல்லி சலோ’ பேரணி 2 நாட்கள் நிறுத்தம்.. விவசாயிகள் அறிவிப்பு.. ஹரியானா எல்லையில் நீடிக்கும் பதற்றம்
டெல்லி: டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் போராட்டத்தில் 21 வயது ஆன விவசாயி பலியான நிலையில், டெல்லி நோக்கி செல்லும் பேரணி 2 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் விவசாயிகள் போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும், வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்தை அறிவித்தனர். டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லி நோக்கி விவசாயிகள் புறப்பட்டனர்.

எனினும், போராடும் விவசாயிகளை டெல்லிக்குள் வர விடாமல் தடுக்க டெல்லி எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பஞ்சாப்பில் இருந்து புறப்பட்ட விவசாயிகள், பஞ்சாப் - ஹரியானா இடையே ஷாம்பு, கானாரி ஆகிய இடங்களில் உள்ள எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளை மீறி முன்னேற முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அங்கேயே விவசாயிகள் டிராக்டர்களை நிறுத்தி, தங்கி விட்டனர்.
போலீஸ், துணை ராணுவத்தினர்: இதற்கிடையே, கடந்த 18 ஆம் தேதி விவசாயிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. 4-வது கட்ட பேச்சுவார்த்தை அன்று நடைபெற்றது. நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பருப்பு வகைகள், மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் திட்டத்தை முன்வைத்தனர்.
இது குறித்து ஆலோசித்து முடிவு செய்வதற்காக போராட்டத்தை 2 நாட்கள் நிறுத்தி வைத்த விவசாயிகள், மத்திய அரசின் பரிந்துரையை நிராகரிப்பதாக அறிவித்தனர். இதையடுத்து, 21-ந் தேதியில் இருந்து டெல்லி நோக்கி மீண்டும் பேரணியாக செல்ல உள்ளதாக அறிவித்தனர். . விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறுவதைத் தடுக்க பஞ்சாப், ஹரியானா என டெல்லியை ஒட்டிய எல்லைகளில் போலீசார், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயி பலி: இந்நிலையில், நேற்று பஞ்சாப் - ஹரியானா இடையிலான கானாரி எல்லையில் முகாமிட்டிருந்த விவசாயிகள், டெல்லி நோக்கி செல்வதற்காக தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அதில் 3 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். இதில் காயம் அடைந்த 21 வயதே ஆன விவசாயி, சுப்கரன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. பலியான விவசாயி சுப்கரன் சிங் பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம் பலோக் கிராமத்தை சேர்ந்தவர். காவல்துறையினர் சுட்டதாகவும், ரப்பர் குண்டு தாக்கியதில் படுகாயமடைந்த சுப்கரன் சிங் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டதாகவும் விவசாய சங்கத்தினர் கூறுகின்றனர். ஆனால் ஹரியானா காவல்துறை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி - குருகிராம் நெடுஞ்சாலை, டெல்லி - பஹதுர்கார் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உத்தரபிரதேசம் - டெல்லி இடையிலான காசிப்பூர் எல்லையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே, விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
போராட்டம் தொடரும்: அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, "விவசாயிகள் அமைதி காக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். இதற்கிடையே, விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்த நிலையில், டெல்லி நோக்கி செல்லும் பேரணியை 2 நாட்கள் நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். எனினும் தர்ணா போரட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
2 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளோம்: இது தொடர்பாக விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான சர்வான் சிங் பாந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இளம் விவசாயி உயிரிழந்ததை தொடர்ந்து போராட்டத்தை 2 நாட்களுக்கு நிறுத்திவைத்துள்ளோம். ஒட்டுமொத்த பிரச்சினையையும் விவாதித்து, அடுத்தகட்ட நடவடிக்கையை 23-ந் தேதி (நாளை) மாலையில் அறிவிப்போம்' என கூறினார்.












Click it and Unblock the Notifications