டெல்லியில் 124-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- பாடல், நடனங்களுடன் ஹோலி கொண்டாட்டம்
டெல்லி: மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 124-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடருகிறது. இன்றைய போராட்டத்தின் நடுவே குதூகலமாக ஹோலி பண்டிகையை விவசாயிகள் கொண்டாடினர்.
விவசாயிகளை வஞ்சிக்கும் 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கை. இதனை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர்.

கடந்த 123 நாட்களாக இந்த போராட்டம் நீடிக்கிறது. இன்று 124-வது நாளாகவும் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடருகிறது. மத்திய அரசின் விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டால்தான் வீடுகளுக்கு திரும்புவோம் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
மேலும் ஏப்ரல் 5-ந் தேதி இந்திய உணவுக் கழகத்தின் அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு அறிவித்துள்ளது. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளும் பலன்தரவில்லை.

இதனால் டெல்லி எல்லை பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டு போராடி வருகின்றனர். இதனிடையே இன்று கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் நாட்டின் பல பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
டெல்லியில் போராடும் விவசாயிகளும் பாடல்களை இசைத்தும் நடனமாடியும் போராட்ட களத்திலேயே ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.