வெள்ளத்தில் மூழ்கிய தலைநகரம்.. டிராபிக் ஜாமால் திணறிய மக்கள்! வேலையை காட்டிய வானிலை!
டெல்லி: தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், வட மாநிலங்களில் மழை வெளுத்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
தெற்கு டெல்லியில் மெஹ்ராலி-பதர்பூர் சாலை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. சில இடங்களில் 3-4 அடி வரை தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சாலை ஏறத்தாழ ஒரு நதியை போல இருந்தது.. வெள்ளம் காரணமாக ஊரை சுற்றிக்கொண்டு மாற்று வழியில் போக வேண்டியிருந்தது என்று மக்கள் புலம்புகின்றனர்.

எம்பி சாலையை தவிர, ஐடிஓ, வஜிராபாத் சாலை, படேல் சாலை, ரோஹ்தக் சாலை, சங்கர் சாலை, கீர்த்தி நகர், டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை மற்றும் ஷாஹீன் பாக் ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. தக்ஷிண்புரி, ஓக்லா, சங்கம் விஹார் மற்றும் சைனிக் ஃபார்ம்ஸ் பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது. நொய்டாவிலும், குருகிராமிலும் மழை காரணமாக மருத்துவமனைக்கு போக முடியாமல் ஆம்புலன்ஸ்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இன்றும் மழையின் தீவிரம் மிதமானதாக இருக்கும் என்றும், நாளை முதல் மழையின் தீவிரம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்திலும் மழையின் தாக்கம் கொஞ்சம் அதிகரிதிருக்கிறது. குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. மழை காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபினி அணை முழு கொள்ளவை எட்டி.. அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்திருக்கிறது. எனவே பிலிகுண்டுலுவுக்கும், மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்திருக்கிறது.
மறுபுறம் சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
