டெல்லியில் 7வது மாதத்தை தொட்ட விவசாயிகள் போராட்டம் - இன்று பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணி
விவசாயிகள் போராட்டம் 7வது மாதத்தை தொட்டுள்ள நிலையில் இன்று நடைபெற உள்ள டிராக்டர் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள் இன்று பிரம்மாண்ட டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளனர். போராட்டம் 6 மாதங்களை நிறைவு செய்து 7வது மாதத்தை தொட்டுள்ளதால் இந்த பேரணியை முன்னெடுத்துள்ளனர். டிராக்டர் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை அறிமுகம் செய்தது. இந்த வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி டிராக்டர்களில் கிளம்பினர். காவல்துறையினர் தடியடி நடத்தி தடுத்தி நிறுத்தியும் முன்னேறிச் சென்றனர் விவசாயிகள்
டிராக்டர்களை வீடுகளாக மாற்றி உணவு சமைத்து சாப்பிட்டுக்கொண்டு டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுட்டெரித்த வெயில், கடும் பனி, மழை என எதற்கும் கலங்கவில்லை விவசாயிகள்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.

தொடர் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 6 மாதங்கள் முடிந்து 7வது மாதத்தைத் தொட்டுள்ளது.

விவசாயிகள் உறுதி
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

விவசாயத்தை காப்போம்
விவசாயத்தை காப்போம், ஜனநாயக நாளை காப்போம் என்ற தலைப்பில் இன்று பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடைபெறுகிறது. இன்று நடைபெற உள்ள டிராக்டர் பேரணிக்கான ஏற்பாடுகள் டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அமைச்சர் வேண்டுகோள்
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

தீர்வு காண தயார்
நாட்டில் பெரும்பான்மை பிரிவினர் இந்த சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். எனினும், இந்த சட்டங்களில் ஏதேனும் ஷரத்துக்கள் ஆட்சேபத்துக்கு உரிய வகையில் இருந்தால் மத்திய அரசு அதற்கு தீர்வு காண தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்ட பேரணி
இன்றைக்கு நடைபெற உள்ள பிரம்மாண்ட டிராக்டர் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications