4 மணி நேரம் இன்று ரயில் மறியல்.. நாடு முழுக்க திரளும் விவசாயிகள்.. பாதுகாப்பு தீவிரம்
டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும், இன்று 4 மணி நேர 'ரெயில் மறியல்' ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
40 விவசாய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்), இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அமைதியான ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடாமல் தடுக்க ரயில்வே போலீசார், பாதுகாப்பை முடுக்கிவிட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) நான்கு மாநிலங்களில் 20 கூடுதல் கம்பெனிகளை நிறுத்தியுள்ளது.
"பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் அமைதியான போராட்டங்களில் ஈடுபடுமாறு அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ரயில்வே பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் அருண்குமார், "அமைதியைக் காக்க அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம். நாங்கள் மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்பு கொள்வோம், ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.