மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!
டெல்லி: ஈரான் போர் உச்சத்தில் இருக்கிறது. எனவே, ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் பயணிப்பது சவாலான விஷயமாக மாறியிருக்கிறது. இப்படி இருக்கையில், இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று, ஈரானின் அச்சுறுத்தலை கடந்து குஜராத் வந்து சேர்ந்திருக்கிறது.
இந்தியக் கொடியுடன் பயணித்த கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் 'ஜக் லட்கி' இன்று, குஜராத்தின் முந்திரா துறைமுகத்தை வந்தடைந்தது. கடந்த 3 நாட்களில் இந்தியா வந்த 3வது கப்பல் இதுவாகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா துறைமுகத்தில் ஏற்றப்பட்ட சுமார் 80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் இக்கப்பல் வந்து சேர்ந்திருக்கிறது.
புஜைரா துறைமுகம், நீரிணைக்கு வெளியே இருக்கிறது. ஆனால், இங்கும் ஈரானின் அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. கடந்த 2019ல் இந்த துறைமுகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த 4 வணிக கப்பல்கள், ஈரானின் லிம்பேட் கண்ணி வெடிகள் மூலம் சேதப்படுத்தப்பட்டது. இப்படி இருக்கையில் இந்த அச்சுறுத்தலை கடந்து இந்திய கப்பல், பத்திரமாக வந்திருக்கிறது.

இந்தியாவின் பலம்
மத்திய கிழக்கில், பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள சூழலில் இந்த வருகை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. உலகின் மொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% கையாளும் இந்த நீரிணை, இந்தியா போன்ற நாடுகளின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிக முக்கியமானது. இது மூடப்பட்டதால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் அபாயம் எழுந்தது.
சாதித்து காட்டிய இந்தியா
இருப்பினும் இந்த தடையை தாண்டி, முன்னதாக, 'எம்.டி. ஷிவாலிக்' மற்றும் 'எம்.டி. நந்தா தேவி' ஆகிய டேங்கர் கப்பல்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் இந்தியா வந்து சேர்ந்தன. இவ்விரு கப்பல்களும் மார்ச் 13 அன்று ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்து, சுமார் 92,712 மெட்ரிக் டன்கள் சமையல் எரிவாயுவைக் கொண்டு வந்தன. ஹார்முஸ் வழியாக இந்தியாவின் பாதுகாப்பான எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பேசியதை தொடர்ந்து, இந்த கப்பல்கள் பாதுகாப்பாக வந்து சேர்ந்தன.
ஈரானின் அனுமதி
இந்தியா-ஈரான் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் நடத்திய உரையாடல்களை அடுத்து, இந்தியக் கொடியுடன் கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதித்தது. மத்திய கிழக்கு மோதல்களால், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயைப் பெறுவது போன்ற மாற்று வழிகளையும் பரிசீலித்து வருகிறது.
கப்பல் போக்குவரத்து பொது இயக்குநரகம்
இதற்கிடையே, கப்பல் போக்குவரத்து பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, கப்பல் உரிமையாளர்கள், ஆள்சேர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு சேவை உரிமம் முகவர்கள், மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள இந்திய தூதரகங்களுடன் இணைந்து, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சீரான கடல்சார் நடவடிக்கைகளை உறுதி செய்வதில் மத்திய அரசு தற்போது கவனம் செலுத்துகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எவ்வளவு பெட்ரோல், டீசல் கிடைக்கும்?
'ஜக் லட்கி' கப்பல், 80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை எடுத்துக்கொண்டு வருகிறது. இதை தூய்மைப்படுத்தினால் பெட்ரோல் 4.32 கோடி லிட்டரும், டீசல் 2.83 கோடி லிட்டரும் கிடைக்கும். இந்த அளவுக்கு பெட்ரோல் சுமார் 10 லட்சம் கார்களுக்கு போதுமானது. டீசல் சுமார் 5 லட்சம் லாரிகளுக்கு போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
