ஜார்க்கண்டில் போராட்டம் தீவிரம்.. ராகுல் பக்கம் வண்டியை திருப்பிய மாணவர்கள்! காங்கிரஸ்க்கு நெருக்கடி
டெல்லி: தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஹேமந்த் சோரன் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும் என ராகுல் காந்திக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை கொடுத்துள்ள நிலையில், போராடும் மாணவர்களை சந்தித்து பேசுமாறு ஹேமந்த் சோரனுக்கு ராகுல் காந்தி அட்வைஸ் கொடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடு நடைபெற்றதால் போட்டி தேர்வுகளை ரத்து செய்யக்கோரி கடந்த 24 நாட்களாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் இல்லத்தை முற்றுகையிடுவோம்
தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு தலைமையில் சுதந்திரமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் போராடி வருகிறர்கள். இதற்கிடையே, ஜார்க்கண்டில் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என்று ராகுல் காந்திக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது. எனவே ராகுல் காந்தி தனது ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஹேமந்த் சோரன் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையென்றால் வரும் 20 ஆம் தேதி முதல்வர் இல்லத்தை முற்றுகையிடுவோம் என்று மாணவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே மாணவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு தரப்பில் இருந்து இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆதரவை திரும்ப பெறுங்கள்
இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஆளும் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுமாறு மாணவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், "ராகுல் காந்தி, ஹேமந்த் சோரனுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை தனிப்பட்ட முறையில் ஹேமந்த் சோரன் சந்தித்து பேச வேண்டும். மாணவர்களின் கவலைகளை போக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்." என்றார்.
ராகுல் காந்தி கோரிக்கை தொடர்பாக மாணவர்கள் கூறுகையில், "மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியால் ராகுல் காந்தி வருத்தம் அடைந்து இருந்தால் போராட்ட களத்திற்கு அவர் வர வேண்டும். அரசுக்கு அளித்து வரும் ஆதரவை ராஜினாமா செய்ய வேண்டும். ஜந்தர் மந்தர் போராட்டத்தில் எப்படி நடந்து கொண்டாரோ அதேபோல, ராகுல் காந்தி நடந்து கொள்ள வேண்டும்" என்றனர். முன்னதாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ராகுல் காந்தி உள்ளிட்டோரின் உருவ பொம்மைகளை எதிர்த்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


Click it and Unblock the Notifications
