கொரோனா தடுப்பூசி.. 25 நாடுகளுக்கு ஏற்றுமதி.. மத்திய அரசு அனுமதி.. அதிரடி காட்டும் சீரம்
டெல்லி: இந்த மாதம் மட்டும் 25 நாடுகளுக்கு சுமார் 2.4 கோடி தடுப்பூசி டோஸ்களை வணிக ரீதியில் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு சீரம் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்து வருகின்றன. இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதலில் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்திருந்தது.

தடுப்பூசி ஏற்றுமதி
இந்தத் தடை உத்தரவை கடந்த மாதம் நீக்கக் கொண்டது. மேலும், கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை வெளியுறவுத் துறை அமைச்சகம் கவனித்துக்கொள்ளும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் மட்டும் சுமார் 1.67 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அதில் வங்கதேசம், மியானர்மர், நேபாளம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இலவசமாக 63 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டன.

25 நாடுகளுக்கு அனுமதி
அதேபோல பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வணிக ரீதியில் சுமார் ஒரு கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த மாதம் சுமார் 2.4 கோடி தடுப்பூசி டோஸ்களை சவுதி அரேபியா, பிரேசில், மியான்மர், கத்தார் உள்ளிட்ட 25 நாடுகளுக்கு வணிக ரீதியாக ஏற்றுமதி செய்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கனடா இல்லை
இருப்பினும், ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் கனடா இல்லை. முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன், சுமார் 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களை அனுப்புமாறு இந்தியாவிடம் கனடா கோரிக்கை விடுத்திருந்தது. இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான கனடா நாட்டிற்கு தடுப்பூசி ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளிக்காதது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசுக்கு அழுத்தம்
கனடாவில் கடந்தாண்டு செப்டம்பர் மாதமே கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், தேவையான கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய முடியாமல் கனடா அரசு திணறிவருகிறது. நாட்டில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பலரும் ஜஸ்டின் ட்ரூடோ அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றார். இதனால் அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கனடாவில் இதுவரை 8.10 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.