பிரதமர் மோடியிடம் உதவி கேட்கும் பாகிஸ்தான் பெண்.. கணவரின் 2வது திருமணத்தை தடுங்க ப்ளீஸ் என கெஞ்சல்
டெல்லி: பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் டெல்லியில் 2வது திருமணம் செய்ய உள்ளார். அவரது திருமணத்தை தடுத்து நிறுத்தி தனக்கு நீதி பெற்று தர வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வீடியோவில் கெஞ்சியுள்ளார். இந்த பெண் யார்? அவரது கணவர் யார்? ஏன் பிரதமர் மோடியிடம் அந்த பெண் உதவி கேட்கிறார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்தவர் நிகிதா நாக்தேவ். இவருக்கும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வரும் பாகிஸ்தான் வம்சாவளியான விக்ரம் நாக்தேவ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 2020 ஜனவரி 26ம் தேதி கராச்சியில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

அதன்பிறகு விக்ரம், தனது மனைவி நிகிதாவை இந்தியாவுக்கு அழைத்து வந்தார். இருவரும் இந்தூரில் வசித்து வந்தனர். அதன்பிறகு 2020 ஜூலை 9 ம் தேதி விசாவில் சில பிரச்சனைகள் உள்ளதாக அவர் தனது மனைவி நிகிதாவிடம் கூறினார்.
மேலும் இந்தியாவில் இருந்தால் கைது செய்யப்படலாம். இதனால் சில காலம் பாகிஸ்தானில் தங்கிவிட்டு விசா பிரச்சனையை சரிசெய்த பிறகு இந்தியாவுக்கு வரலாம் என்று கூறினார். மேலும் நிகிதாவை அட்டாரி எல்லையில் விட்டுவிட்டு விக்ரம் இந்தூருக்கு வந்தார். இதையடுத்து நிகிதா பாகிஸ்தானில் உள்ள தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.
அதன்பிறகு தொடர்ந்து விக்ரம் தனது மனைவி நிகிதாவை புறக்கணித்து வந்துள்ளார். நிகிதா தன்னை இந்தியா அழைத்து கொள்ளும்படி போனில் பலமுறை கூறி வந்துள்ளார். ஆனால் விக்ரம் அதனை நிறைவேற்றவில்லை. தொடர்ந்து ஏதாவது காரணத்தை கூறி மறுத்து வந்துள்ளார். இதற்கிடையே தான் தற்போது பாகிஸ்தான் பெண் நிகிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
‛‛நானும், விக்ரமும் 2020ம் ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்தோம். அதன்பிறகு 2020 ஜூலை மாதம் விசாவை காரணம் காட்டி என் கணவர் விக்ரம் என்னை பாகிஸ்தான் அனுப்பி வைத்தார். அதன்பிறகு என்னை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து கொள்ளவில்லை. இப்போது நெருங்கிய உறவுக்கார பெண்ணை 2வது திருமணம் செய்ய உள்ளார். டெல்லியில் திருமண ஏற்பாடு நடக்கிறது.
இதனை தடுத்து பிரதமர் மோடி எனக்கு நீதி பெற்று தர வேண்டும். நீதி கிடைக்கவில்லை என்றால் நீதித்துறை மீதான நம்பிக்கை போய்விடும். பல பெண்கள் தங்களின் கணவரின் வீட்டில் மனஉளைச்சல் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பெண்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக நிகிதா தனது கணவர் விக்ரம் 2வது திருமணம் செய்வதை எதிர்த்து 2025 ஜனவரி 27ல் எழுத்துப்பூர்வ புகார் அளித்தார். இந்த வழக்கை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிந்தி பஞ்ச் மத்தியஸ்தம் மற்றும் சட்ட ஆலோசனை மையம் விசாரித்தது. விக்ரம் மற்றும் அவரது வருங்கால மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கப்பட்டது.
இருப்பினும் அதில் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை. இருவரும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் இல்லை என்பதால் இதுபற்றி பாகிஸ்தான் நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும். விக்ரமை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இப்படியான சூழலில் தான் நிகிதா, பிரதமர் மோடியிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications