பட்டாசு ஆலை வெடி விபத்து... நீதிபதி தலைமையில் 8 பேர் குழு விசாரணை... தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி!
டெல்லி: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக நீதிபதி தலைமையில் 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், மாநில மாசு கட்டுப்பாடு வாரியம், விருதுநகர் மாவட்ட கலெக்டர், விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

20 தொழிலாளர்கள் பரிதாப பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12-ம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அங்குள்ள அறைகளில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் தாறுமாறாக வெடித்து சிதறியதால் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் கர்ப்பிணி, குழந்தைகள் என பலர் உடல் சிதறி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

முதல்வர் நிவாரண உதவி
மேலும் படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் பெரும் சோக அலைகளை உருவாக்கிய இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். மேலும், பிரதமர், முதல்வர் சார்பில் நிவாரண உதவியும் அறிவிக்கப்பட்டது.

ஆலை உரிமையாளர் கைது
சிறிய அறைகளில் பலரை பணியமர்த்தியதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அதிகரித்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆலை குத்தகைதாரர் பொன்னுப்பாண்டி, குத்தகைதாரர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஆகிய 3 பேர் முதலில் கைது செய்யப்பட்டு இருந்தனர். தலைமறையாக இருந்த ஆலை உரிமையாளர் சந்தனமாரியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

தமிழக அரசுக்கு நோட்டீஸ்
இந்த நிலையில் நீதிபதி தலைமையில் 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த வெடி விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏகே கோயல், தமிழக அரசு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், மாநில மாசு கட்டுப்பாடு வாரியம், விருதுநகர் மாவட்ட கலெக்டர், விபத்துக்குள்ளான பட்டாசு ஆலைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி தலைமையில் விசாரணை
மேலும், விபத்துக்கான உண்மை காரணத்தை கண்டறிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.கண்ணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவையும் நீதிபதி கோயல் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதோடு, விபத்து நடந்த இடத்துக்கு சென்று விரைவில் ஆய்வு செய்து விசாரணை நடத்தவும், ஒரு மாதத்தில் இ மெயில் மூலமாக தனது அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதி கோயல் உத்தரவிட்டுள்ளார்.