நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு அடித்த எச்சரிக்கை மணி.. எவ்வளவு நேரத்தில் இந்தியாவை தாக்கும்!
டெல்லி: கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது. சமீப காலங்களில் நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளமாக இது பார்க்கப்படுகிறது. அதேநேரம் இது இந்தியாவுக்கும் ஒரு முக்கியமான எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு வெள்ளம், அந்த நாட்டின் எல்லையை தாண்டியும் இந்தியாவுக்கு மிக பெரிய எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இமயமலையில் உருவாகும் பல முக்கிய நதிகளை இந்தியாவும் நேபாளமும் பகிர்ந்து கொள்ளும் நிலையில், நேபாளத்தில் ஏற்படும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற நிகழ்வுகள் இந்தியாவின் வட மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நேபாள வெள்ளம்
அதேநேரம் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் வரும் நீர் அனைத்துமே பேரழிவு வெள்ளமாக மாறிவிடாது. மலை பகுதிகளில் இருந்து மிக பெரிய அளவில் நீர், மண், பாறைகளை சுமந்து வரும் வெள்ளம், சமவெளியை அடையும்போது அதன் வேகம் குறையலாம். ஆனால் இந்திய பகுதியில் பெய்யும் மழை, நதிகளின் நீர்மட்டம், தடுப்பணைகளின் நிலை, வடிகால் அமைப்பு ஆகியவையே வெள்ளம் எந்த அளவுக்கு பேரழிவாக மாறும் என்பதை தீர்மானிக்கின்றன.
ஆறுகள்
நேபாளத்தில் 6,000க்கும் மேற்பட்ட ஆறுகள் மற்றும் நீரோடைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தெற்கு நோக்கி பாய்ந்து, இந்தியா மற்றும் கங்கை நதியை சென்றடைகின்றன. கிழக்கில் கோசி, மத்திய பகுதியில் கண்டகி, மேற்கில் கர்னாலி ஆகியவை முக்கிய நதி அமைப்புகளாக உள்ளன. மகாகாளி நதி இந்திய எல்லையில் ஷாரதா என்ற பெயரில் பாய்கிறது. இதுதவிர பாக்மதி, கமலா, ராப்தி, பபாய் உள்ளிட்ட சிறிய நதிகளும் இந்தியாவை நோக்கி வருகின்றன. நேபாளத்தில் இருந்து இந்திய சமவெளிக்குள் 7 முதல் 9 முக்கிய நதிகள் பாய்வதாக நீரியல் நிபுணர் மணீஷ் ஸ்ரேஷ்டா தெரிவித்துள்ளார்.
ஆபத்து
நேபாள ஆறுகளில் ஏற்படும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இந்திய மாநிலமாக பீகார் உள்ளது. வட பீகாரின் சுமார் முக்கால்வாசி பகுதி வெள்ள அபாயம் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோசி, கண்டக், பாக்மதி, கமலா உள்ளிட்ட முக்கிய நதிகள் நேபாளத்தில் உருவாகி பீகாருக்குள் வருகின்றன. குறிப்பாக 'பீகாரின் சோகம்' என்று அழைக்கப்படும் கோசி நதி வரலாற்று ரீதியாக மிக பெரிய வெள்ள அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது தவிர உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதிகளும் காக்ரா, ராப்தி, கண்டக் உள்ளிட்ட நதிகளால் பாதிக்கப்படக்கூடியவை. கோரக்பூர், பஹ்ரைச், லக்கிம்பூர் கேரி, ஷ்ராவஸ்தி உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் உள்ளது. உத்தரகண்ட், வடக்கு மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளும் இதே நதியால் பாதிக்கப்படக்கூடியவை.
2008 கோசி வெள்ளம் உணர்த்தும் பாடம்
நேபாள வெள்ளம் இந்தியாவில் எவ்வாறு பேரழிவாக மாறலாம் என்பதற்கு 2008ம் ஆண்டு கோசி வெள்ளம் முக்கிய உதாரணமாக உள்ளது. அப்போது பீகாரில் சுமார் 400 பேர் உயிரிழந்தனர். ஆனால் அந்த வெள்ளம் நதியின் வழக்கத்திற்கு மாறான அதிக நீரோட்டத்தால் மட்டும் ஏற்படவில்லை. பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாத தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாகவே பேரழிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இந்தியாவில் வெள்ளத்தின் தாக்கம் என்பது நேபாளத்தில் பெய்யும் மழையின் அளவை மட்டும் சார்ந்தது அல்ல என்பது தெளிவாகிறது.
அதாவது நேபாளத்தில் அதீத மழை பெய்தாலும் கூட அதை தடுப்பணைகளில் தடுத்து வைக்க முடியும். ஆனால், அந்த தடுப்பணைகளும் மோசமான நிலையில் உரிய பராமரிப்பு இல்லாமல் போகும்போது அதுவே பேரழிவை ஏற்படுத்துவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எவ்வளவு டைம் கிடைக்கும்
நேபாளத்தில் வெள்ளம் ஏற்படும்போது நீரின் வேகத்தை பொறுத்து இந்தியாவுக்கு சுமார் 12 மணி நேரம் முதல் 2 நாட்கள் வரை முன்னெச்சரிக்கை கிடைக்கலாம். ஆனால் சிறிய, வேகமாக பாயும் ஆறுகளில் ஏற்படும் திடீர் வெள்ளம் சில மணி நேரங்களிலேயே இந்தியாவை அடையக்கூடும். எனவே, நேபாளத்தில் ஏற்படும் மாற்றங்களை நாம் உற்று கவனித்து வர வேண்டும்.
இந்தியா மற்றும் நேபாளம் என இரு நாடுகளுமே பரஸ்பர பாதுகாப்பை உறுதி செய்ய மழை அளவு, ஆற்று நீர்மட்டம் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன. இருப்பினும் சில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கண்காணிப்பு மையங்கள் குறைவாக இருப்பது, இரு நாடுகளுக்கும் இடையேயான வெள்ள முன்னறிவிப்பு அமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
கவனிக்க வேண்டியவை
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நதியில் ஏற்படும் வெள்ளத்தால் இந்தியாவில் மோசமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அதாவது நாம் கவலைப்பட வேண்டியது ஒரு குறிப்பிட்ட நதியை பற்றி மட்டும் அல்ல. மாறாக, இமயமலையில் வேகமாக மாறிவரும் இயற்கை குறித்து நாம் கவலைப்பட வேண்டும். பனிப்பாறை உருகுவது, பனிப்பொழிவுக்குப் பதிலாக மழை பெய்வது, நிலச்சரிவு, பாறைகள், அதிகளவில் வண்டல் சேருவது ஆகியவை வெள்ளத்தை ஏற்படுத்துகிறது. சாதாரண வெள்ளத்தைவிடப் பல மடங்கு ஆபத்தான நீரும் சேரும் பாறைகளும் கலந்து அடிக்கும் வெள்ளத்தை இது உருவாக்குகிறது.
இமயமலையில் இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளிலும் இந்த பேரழிவுகளிலும் காணப்பட்டுள்ளன. மேலும், காலநிலை மாற்றத்தால் தீவிர மழை பொழிவு அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வெப்பநிலை உயர்வால் அதிக ஈரப்பதம் உருவாகி, குறுகிய காலத்தில் அதிக மழை பெய்யும் சூழல் ஏற்படுகிறது. இதனால் நிலச்சரிவு, பனிப்பாறை ஏரி உடைப்பு உள்ளிட்ட மலைப்பகுதி அபாயங்களும் அதிகரிக்கக்கூடும். எனவே, நேபாள வெள்ளம் என்பது நேபாளத்தின் பிரச்சனை மட்டுமல்ல. இமயமலையை இந்தியா மற்றும் நேபாளம் என இரு நாடுகளுமே பகிர்ந்து கொள்ளும் நிலையில், இரு தரப்புமே எச்சரிக்கையாக இருக்க வேண்டி உள்ளது!


Click it and Unblock the Notifications
