டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அணை பாதுகாப்பு மசோதா: 'அத்துமீறும் மத்திய அரசு,பாலைவனமாகும் தமிழகம்..' ராஜ்யசபாவில் அனல் பறந்த வாதம்

Google Oneindia Tamil News

டெல்லி: மாநிலங்களவையில் இன்று அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மத்திய அரசு மாநில உரிமைகளில் தொடர்ந்து தலையிட்டு வருவதாக எதிர்க்கட்சி எம்பிகள் சாடினார்.

நாட்டிலுள்ள அணைகள் பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு அணை பாதுகாப்பு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. இதன்படி அணைகள் பாதுகாப்பு உள்ளிட்ட நிர்வாகத்திற்காகத் தேசிய அளவில் அணைகள் பாதுகாப்புக் குழு ஒன்று அமைக்கப்படும்.

இது மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி தமிழ்நாடு தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தது.

 திருச்சி சிவா கோரிக்கை

திருச்சி சிவா கோரிக்கை

இந்தச் சூழலில் மக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ராஜ்யசபாவில் இந்த மசோதா இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக நீண்ட நேரம் காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது அணை பாதுகாப்பு மசோதாவை ராஜ்யசபா நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று திமுகவின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தினார்.

 மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்

மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்

இது தொடர்பாக திமுக எம்பி திருச்சி சிவா கூறுகையில், "அணை பாதுகாப்பு மசோதாவில் கண்காணிப்பு, சோதனை, செயல் முறை, பராமரிப்பு ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசு கொண்டு வரும் பெரும்பாலான மசோதாக்கள் மாநில உரிமைகளை மீறுவதாக உள்ளது. இந்த மசோதா மாநிலங்களின் உரிமைகளையும் பறிக்கும் வகையில் உள்ளது மாநிலங்களின் அதிகாரங்களை அத்துமீறிப் பறிக்க முடியாது" என்று அவர் பேசினார்.

 அரசியலமைப்பு மீறல்

அரசியலமைப்பு மீறல்


அதேபோல திமுக எம்பி டி.கே.எஸ். இளங்கோவன் இந்த அணை பாதுகாப்பு மசோதா இந்திய அரசியலமைப்பை மீறும் செயல் என்று குறிப்பிட்டார். மேலும், மாநிலங்களிடம் இருந்து எவ்வித ஒப்புதலையும் பெறாமல் மத்திய அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார். அதேநேரம் அணை பாதுகாப்பு மசோதா காலத்தின் கட்டாயம் எனக் குறிப்பிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி விஜய்சாய் ரெட்டி, பழமையான அணைகளின் உறுதித்தன்மை மற்றும் பராமரிப்புக்கு அணை உரிமையாளர்களே பொறுப்பு என்றார். மேலும் ஒவ்வொரு அணைக்கும் பாதுகாப்பு பிரிவு தனியாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 பாலைவனமாகத் தமிழகம்

பாலைவனமாகத் தமிழகம்

இந்த மசோதா குறித்து ராஜ்ய சபாவில் பேசிய மதிமுக தலைவர் வைகோ, இச்சட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டால் அது தமிழகத்திற்குப் பேரபாயத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும், இந்த சட்டத்தால் தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல மாநில விவகாரங்களில் மத்திய அரசு தொடர்ந்து தலையிடுவதாக விமர்சித்த ராஷ்டிரிய ஜனதா தள எம்பி மனோஜ் குமார் ஜா, எப்போதும் தாங்கள் மட்டுமே ஆட்சியில் இருப்போம் என பாஜக நினைத்துக் கொண்டிருப்பதாகச் சாடினார்.

 அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்

அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்

அணை உள்ள மாநிலங்களின் நலன்களைப் பாதுகாப்பும் அம்சம் எதுவும் இல்லை. எனவே, இந்த மசோதாவால் தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு தான். எனவே இந்த மசோதாவை நாம் நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். அதேபோல சிபிஎம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் எம்பிகள் மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.

 காங்கிரஸ் எதிர்ப்பு

காங்கிரஸ் எதிர்ப்பு

அதேபோல காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினர் சக்திசிங் கோஹிலும் அணை பாதுகாப்பு மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று விமர்சித்தார். மேலும் அவர் கூறுகையில், "இந்த மசோதா முதலில் கடந்த 2010இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்டது என அவர்கள் கூறுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அப்போது காங்கிரஸ் முன்மொழிந்த சட்டத்தில் மாநில சட்டமன்றத்தில் 3இல் 2 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இச்சட்டம் பொருந்தும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், இப்போது நீக்கப்பட்டுள்ளது" என்றார்.

 வரம்பு மீறும் மத்திய அரசு

வரம்பு மீறும் மத்திய அரசு

இது தொடர்பாக ராஜ்ய சபாவில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி நதிமுல் ஹக், "நாட்டில் 5,334 பெரிய அணைகள் உள்ளன. மேலும் நாட்டிலுள்ள 293 அணைகள் 100 ஆண்டுகள் பழமையானவை. அதேநேரம் அணை பாதுகாப்பு மசோதா உருவாக்கப்பட்ட விதத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். மத்திய அரசு அதன் அதிகார வரம்பிற்குள் இல்லாத விஷயங்களில் கூட சட்டங்களை இயற்றி வருகிறது. சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட விவசாய சட்டங்களும் இதுபோன்றது தான்" என்றார்.

 அமைச்சர் விளக்கம்

அமைச்சர் விளக்கம்

இதையடுத்து அணை பாதுகாப்பு மசோதா குறித்து ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசுகையில், "இந்ச மசோதாவை விரைவில் சட்டமாக்கி பயன்பாட்டுக்கு வர வேண்டும். முல்லைப் பெரியாறு அணை குறித்து ஏற்கனவே சபையில் விவாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் நாட்டில் இதுபோன்ற 14 அணைகள் உள்ளன, இதுபோன்ற அணைகளின் பாதுகாப்பு என்பது நம் அனைவரின் பொறுப்பு. நாங்கள் எங்கள் பொறுப்பை விட்டுவிட மாட்டோம். இந்தச் சட்டம் அணைகளின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழுவுக்குத் தேவையான அதிகாரங்களை வழங்கும்" என்றார்.

 மசோதா நிறைவேறியது

மசோதா நிறைவேறியது

அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக ராஜ்ய சபாவில் நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. இருப்பினும், அதன் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா ராஜ்யசா சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலாக இச்சட்டம் அனுப்பிவைக்கப்பட்டது.

English summary
Rajya sabha debate on Dam Safety Bill. Dam Safety Bill Rajya sabha debate in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X