நாட்டில் தடுப்பூசி, ஆக்சிஜன் போல மோடியும் காணாமல் போய்விட்டார் - ராகுல் கடும் தாக்கு
தடுப்பூசி, ஆக்சிஜன், மருந்துகளுடன் மோடி காணாமல் போய்விட்டார், அவரது புகைப்படம் மட்டுமே இருக்கிறது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
டெல்லி: நாட்டில் தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமர் மோடியையும் காணவில்லை என்று காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். சென்டிரல் விஸ்டா பணிகள், மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி, அங்கும், இங்குமாக பிரதமரின் புகைப்படங்கள் ஆகியவை மட்டுமே மிச்சம் இருப்பதாக கிண்டலடித்துள்ளார் ராகுல்காந்தி.
மத்திய அரசு கொரோனாவின் இரண்டாம் அலையை சரியாகக் கையாளவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,120 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பல மாநிங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் நாடாளுமன்ற புதிய கட்டிடம், பிரதமருக்கான புதிய இல்லம் போன்ற கட்டுமான பணிகள் அடங்கிய சென்டில் விஸ்டா திட்டத்தையும் அவர் குறை கூறி வருகிறார். ஆறுகளில் சடலங்கள் மிதப்பது பிரதமரின் கண்களுக்கு தெரியவில்லை சென்ட்ரல் விஸ்டா மட்டுமே தெரிகிறது என்று விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில், தடுப்பூசிகள், கொரோனா மருந்துகள் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்ற அர்த்தத்தில் அவர் பிரதமர் மோடி மீது தாக்குதல் தொடுத்துள்ளார்.
ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், தடுப்பூசிகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றுடன் பிரதமரும் காணாமல் போய்விட்டார். சென்டிரல் விஸ்டா பணிகள், மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி, அங்கும், இங்குமாக பல இடங்களில் பிரதமரின் புகைப்படங்கள் மட்டுமே மிச்சம் இருக்கின்றன என்று கிண்டலடித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றம் கட்டுவது, பிரதமருக்கு வீடு கட்டுவது உள்ளிட்டவற்றை அடக்கிய மத்திய விஸ்டா திட்டத்தை கொரோனா காலத்தில் செய்யக் கூடாது. அதற்குச் செலவிடும் தொகையை மக்களின் சுகாதாரத் திட்டங்களுக்குச் செலவிடலாம் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், மத்திய விஸ்டா திட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications