ராணுவ சீருடையை பிரதமர் மோடி அணிவது தண்டனைக்குரிய குற்றம்.. அதிரடியாக நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்
டெல்லி: பிரதமர் மோடி கடந்த ஆண்டு காஷ்மீர் சென்றிருந்தபோது ராணுவத்தின் சீருடை அணிந்திருந்தது தண்டனைக்குரிய குற்றம் என்றும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படியும் பிரதமர் அலுவலகத்துக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். எதிரி நாடுகளிடம் இருந்தும், பயங்கரவாதிகளிடம் இருந்தும் நாட்டு மக்களை உயிரை கொடுத்து பாதுகாத்து வரும் ராணுவ வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் மோடி அவர்களை சந்தித்து வருகிறார்.

ராணுவ வீரர்களை சந்திக்கும் பிரதமர் மோடி
இதேபோல் கடந்த ஆண்டு காஷ்மீரில் உள்ள நவ்ஷேராவில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்திய ராணுவத்தின் சீருடையை அணிந்திருந்தார். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மாவட்ட பிரயாக்ராஜ் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராகேஷ் நாத் பாண்டே என்பவர் பிரதமர் மோடிக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.

ராணுவ சீருடையை அணிவது தவறு
''பிரதமர் மோடி காஷ்மீர் சென்றிருந்தபோது ராணுவத்தின் சீருடை அணிந்திருந்தார். இது குற்றமாகும்., ஏனெனில் ராணுவ வீர்கள், கடற்படை வீரர்கள் அல்லது விமானப் படை வீரர்கள் பயன்படுத்தும் சீருடைகளை அணிவது அல்லது எடுத்துச் செல்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 140வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்'' என்று ராகேஷ் நாத் பாண்டே தனது மனுவில் கூறி இருந்தார்.

பிரதமர் அலுவலகத்துக்கு நோட்டீஸ்
இந்த மனுவை மாவட்ட நீதிபதி நளின் குமார் ஸ்ரீவஸ்தவா விசாரித்தார். அப்போது வழக்கறிஞர் ராகேஷ் நாத் பாண்டே முன்வைத்த கருத்துக்களை கேட்ட நீதிபதி நளின் குமார் ஸ்ரீவஸ்தவா, இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி பிரதமர் அலுவலகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 156(3) பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட்டுக்கு விசாரணைக்கு உத்தரவிட அதிகாரம் அளிக்கிறது. அறியக்கூடிய குற்றம் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

ஏற்கனவே நிராகரிப்பு
இந்த மனுவை கடந்த ஆண்டு டிசம்பரில் வழக்கறிஞர் ராகேஷ் நாத் பாண்டே முதன்முதலில் தாக்கல் செய்தபோது, இந்த சம்பவம் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் நடக்கவில்லை என்றும், இந்த வழக்கை அதிகார வரம்பில் உள்ள மாஜிஸ்திரேட் விசாரிக்கலாம் என்றும் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஹரேந்திர நாத் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications