விரைவில் சட்டமன்ற தேர்தல் - உ.பி.யை குறிவைக்கும் பிரதமர்.. தயான் சந்த் மைதானத்துக்கு இன்று அடிக்கல்
டெல்லி: உத்திரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி புத்தாண்டில் முதன்முறையாக உத்திரபிரதேசம் சென்று மேஜர் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் பிரதமர் அங்கு 4 முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பதவி ஏற்று ஆட்சி நிறைவடையும் தருவாயில் மக்கள் அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே உத்திரப்பிரதேசத்தில் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பாஜக போலவே காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசாரக் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு சமமாக காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகியோரும் களத்தில் முன்னணியில் இருக்கின்றனர்.

உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தல்
பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசத்தில் சில காலமாக மாநிலத்தின் அரசியல் களத்தில் தீவிரமாக பங்காற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச் சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் லட்சிய திட்டமான கங்கா எக்ஸ்பிரஸ்வே ஆறு வழிச்சாலையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
குறிப்பாக கடந்த நவம்பர் டிசம்பர் மாதத்தில் மட்டும் பிரதமர் மோடி 5 முதல் 7 தடவைகள் உத்தரப் பிரதேசத்தில் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் குறிப்பாக வாரணாசி காசி லஹர்தர் உள்ளிட்ட பல இடங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மோடி தொடங்கி வைத்த நிலையில் மீண்டும் அவர் புத்தாண்டில் முதன்முறையாக உத்தரப்பிரதேசம் செல்கிறார்.

தயான் சந்த் பல்கலைக் கழகம்
இன்று மதியம் 1 மணியளவில் மீரட்டில் நவீன மற்றும் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் கூடிய மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த பல்கலைக்கழகம் இரண்டரை வருடங்களில் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.க்கு முக்கியத்துவம்
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மீரட்டின் சர்தானா நகரின் சல்வா மற்றும் காளி கிராமங்களில் சுமார் 700 கோடி மதிப்பீட்டில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்ப்பது பிரதமரின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும். மேலும் நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடியின் உத்திரபிரதேச பயணம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications