பிரதமர் மோடி நாளை நேபாளம் பயணம்! 19 கி.மீ. தொலைவில் சீனா நடத்தும் பிரமாண்ட விழாவுக்கு செம்ம செக்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை நேபாளத்தின் லும்பினிக்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளார். லும்பினி அருகே சீனா கட்டிய பிரமாண்ட விமான நிலையத்துக்கு செல்லாமல் நேரடியாக லும்பினி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி செல்வது சர்வதேச அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வைசாகா புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அரசு முறை பயணமாக நாளை நேபாளத்தின் லும்பினி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு லும்பினி துறவிமட மண்டலத்தில் தனித்துவம் வாய்ந்த புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்தின் கட்டமைப்பு விழாவான "ஷிலன்யாசில்" பிரதமர் மோடி கலந்து கொள்வார். லும்பினியில் உள்ள புனித மாயாதேவி ஆலயத்திற்குச் செல்லும் பிரதமர், அங்கு பிரார்த்தனை செய்வார். நேபாள அரசின் ஆதரவுடன் லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்த ஜெயந்தி விழாவிலும் பிரதமர் மோடி உரையாற்றுவார்.
பிரதமர் மோடி மே 26ல் தமிழகம் வருகை.. நேரில் சந்தித்து கோரிக்கை தருகிறார் முதல்வர் ஸ்டாலின்

டெல்லி நிகழ்வு
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் நிதி ஆதரவோடு, லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளையின் உதவியோடு சர்வதேச புத்த கூட்டமைப்பால் தனித்துவம் வாய்ந்த 'புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையம்' கட்டமைக்கப்படும். சர்வதேச புத்த கூட்டமைப்பு என்பது கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஓர் அமைப்பாகும். நேபாளத்தின் முதலாவது நிகர பூஜ்ஜிய வெளியீட்டு கட்டிடமாக இந்த புத்த மையம் விளங்கும்.
மேலும் வைசாக புத்தபூர்ணிமா கொண்டாட்டமாக டெல்லியில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுக்கு சர்வதேச புத்த கூட்டமைப்புடன் இணைந்து கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. காலை, நேபாளத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டும் விழா அப்போது திரையிடப்படும். இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் கிரண் ரிஜிஜூ சிறப்பு விருந்தினராகவும், மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநில வளர்ச்சி அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கௌரவ விருந்தினராகவும், கலாச்சார இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொள்வார்கள்.

நேபாள நிகழ்ச்சிகள்
இதனிடையே தமது நேபாள பயணம் தொடர்பாக பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: நேபாளத்தின் பிரதமர் ஷேர் பகதூர் தியூபா அவர்களின் அழைப்பின் பேரில் மே 16 அன்று நான் நேபாளத்தின் லும்பினிக்கு செல்கிறேன். புத்த ஜெயந்தியை முன்னிட்டு மாயாதேவி கோவிலில் பிரார்த்தனை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். புத்தர் பிறந்த புனித தலத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக லட்சக்கணக்கான இந்தியர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன். கடந்த மாதம் பிரதமர் தியூபாவின் இந்தியப் பயணத்தின் போது எங்களது ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அவரை மீண்டும் சந்திப்பதையும் எதிர்பார்க்கிறேன். புனல் மின்சாரம், மேம்பாடு மற்றும் இணைப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான எங்கள் பகிரப்பட்ட புரிதலை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம். புனித மாயாதேவி கோயிலுக்குச் செல்வதைத் தவிர, லும்பினி மடாலயத்தில் உள்ள புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையத்தின் பூமி பூஜை நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். நேபாள அரசால் நடத்தப்படும் புத்த ஜெயந்தி விழாவைக் குறிக்கும் கொண்டாட்டங்களிலும் நானும் கலந்துகொள்கிறேன்.

இருதரப்பு வரலாறு
நேபாளத்துடனான நமது உறவு இணையற்றது. இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான நாகரீகரீதியிலான, மக்களிடையேயான தொடர்புகள் நமது நெருங்கிய உறவின் நீடித்த கட்டமைப்பாக அமைகின்றன. எனது பயணமானது, பல நூற்றாண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்டு, நமது நீண்ட கால வரலாற்றில் ஒன்றுக்கொன்று கலந்தாலோசித்து பதிவுசெய்யப்பட்ட இந்த காலத்தால் போற்றப்படும் தொடர்புகளைக் கொண்டாடுவதையும், மேலும் பலப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சர்வதேச முக்கியத்துவம்
அண்டை நாடான நேபாளத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர சீனா பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது கவுதம புத்தா விமான நிலையத்தை கட்டித் தந்துள்ளது. இதன் திறப்பு விழாவும் நாளைதான் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக பெருமளவிலான சீனா அதிகாரிகள் அங்கு குவிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில்தான் லும்பினியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் பங்கேற்கின்றனர். சீனா கட்டும் விமான நிலையத்தை பயன்படுத்தாமல் உ.பி.யின் குஷிநகர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக லும்பினி செல்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியின் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.