பெரிய சம்பவம் செய்யணுமா.. காங்கிரஸ் தலைவராக ராகுலை நியமிக்கணும்.. சரத் யாதவ் சரவெடி
டெல்லி: ‛‛காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தியை நியமித்தால் தான் பெரிய சம்பவங்களை செய்ய முடியும்'' என்று ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் சரத் யாதவ் கூறினார்.
பீகாரை சேர்ந்தவர் சரத் யாதவ் . இவர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்தார். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அவர் நிதிஷ் குமார் கட்சியில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து அவர் லோக் தந்திரிக் ஜனதாதளம் என்ற கட்சியை 2018 ல் துவக்கினார். இதற்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் சமீபத்தில் தனது கட்சியை லால் பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் இணைத்தார்.

சரத் யாதவை சந்தித்த ராகுல்
இந்நிலையில் டெல்லியில் உள்ள சரத் யாதவின் வீட்டுக்கு இன்று ராகுல்காந்தி திடீரென்று சென்றார். அப்போது அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் இந்திய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு ராகுல்காந்தியும், சரத் யாதவும் ஒன்றாக வெளியே வந்தனர். அப்போது ராகுல்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:

மோசமான நிலையில் நாடு
‛‛சரத் யாதவ் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். தற்போது அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் நன்றாக உள்ளார். இதனால் நான் மகிழ்ச்சியடைகிறனே். சரத் யாதவ் எனக்கு அரசியலில் அதிகம் கற்று கொடுத்துள்ளார். நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என சரத் யாதவ் கூறியது உண்மையாகி உள்ளது. இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நாட்டில் வெறுப்பு பரப்பப்பட்டு நாடு பிளவுபடுகிறது. தேசத்தை ஒன்றிணைத்து, நமது வரலாற்றின் ஒரு அங்கமான சகோதரத்துவத்தின் பாதையில் நாம் நடக்க வேண்டும்'' என்றார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல்
இதையடுத்து சரத் யாதவிடம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், ‛‛ஏன் நியமிக்ககூடாது. காங்கிரஸ் கட்சியை 24 மணிநேரமும் இயக்கும் சக்தி ராகுல் காந்திக்கு உள்ளது. இதனால் அவரை காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்க வேண்டும். அப்போது தான் தரமான பெரிய சம்பவம் செய்ய முடியும் '' என்றார்.

பார்க்கலாம் என்ற ராகுல்
சரத்யாதவின் இந்த பதில் குறித்து ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு ராகுல்காந்தி, ‛‛பார்க்கலாம்'' என பதிலளித்தார். கடந்த மாதம் சரத் யாதவ் தனது கட்சியை ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் இணைத்தபோது மத்தியில் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க உதவி செய்வதாக கூறினார். இந்நிலையில் தான் ராகுல்காந்தி, சரத் யாதவை சந்தித்து நலம் விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications