ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது - சுப்ரீம் கோர்டில் தமிழக அரசு பதில் மனு
ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார். 20 நாட்களாக 8 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில்,புதன்கிழமையன்று கர்நாடகாவில் ஹாசன் நகரில் ராஜேந்திர பாலாஜியை சுற்றி வளைத்து காவல்துறை கைது செய்தது. 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் கேள்வி
முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.அப்போது,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் அரசின் உள்நோக்கம் உண்டா?,மேலும்,அவரின் முன்ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம்,அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. மேலும்,ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களை, வழக்கறிஞர்களை எல்லாம் ஏன் தொந்தரவு செய்தீர்கள்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

ஜாமீன் தரக்கூடாது
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிச்சயமாக இந்த விசயத்தில் தமிழக அரசுக்கு உள்நோக்கம் இல்லை. மாறாக,ராஜேந்திர பாலாஜிமீது ஏராளமான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததன் காரணமாகவே அவரை நாங்கள் கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று தெரிவித்தார். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை நடவடிக்கை
ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்த, அவரால் ஏமாற்றப்பட்ட நபர்கள் அளித்த புகாரின் அடிப்படையிலையே தான் அவர் மீது பணமோசடி முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மீதான குற்றத்திற்கான அனைத்து முகாந்திரமும் இருந்ததாலும், வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டதால் தான் சென்னை உயர்நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழக்கு இருக்கும் வரை ராஜேந்திர பாலாஜியை காவல்துறை கைது செய்யவில்லை, அவரது முன்ஜாமுன் மனு தள்ளுபடி ஆன பின்னரே காவல்துறை சட்ட நடவடிக்கையை மேற்கொண்டது.

தலைமறைவானார்
குறிப்பாக முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டபோது, ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி பின்னர் அங்கிருந்து தப்பிசென்று தலை மறைவாகினார்.எனவே தான் தமிழக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை பல நாட்கள் தேடுதலுக்கு பின்னர் கைது செய்தனர். ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.

ஏழை மக்களை ஏமாற்றும் செயல்
மேலும், ராஜேந்திர பாலாஜி மீது தற்போதும் தொடர்ந்து மோசடி புகார்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையின் தான் சட்டரீதியான நடவடிக்கைக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் என்பது வேலைக்காக காத்திருக்கும் ஏழை, நடுத்தர மக்களை ஏமாற்றும் செயல். அவர்களின் அறியாமையை பயன்படுத்தி மோசடி செய்த விசயம், எனவே இதை லேசாக கடந்து போக முடியாது.
Recommended Video

ரிட் மனுவை தள்ளுபடி செய்க
தற்போதைய நிலையில், 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு ஏதாவது நிவாரணம் வழங்கப்பட்டால் , அது வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தும், அது வழக்கின் விசாரணையை பாதிக்கும். அதனால் தன் மீது பதியப்பட்ட மோசடி வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மற்றும் ரிட் மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications