பாஜக நடிகை சோனாலி போகட் கொலை நிகழ்ந்த கோவா ஹோட்டலை இடிக்க சுப்ரீம் கோர்ட் தடை!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின்( பாஜக ) பிரமுகரான நடிகை சோனாலி போகட் அல்லது சோனாலி போகத் கொலை நிகழ்ந்த கோவா கர்லீஸ் சொகுசு விடுதியை இடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நடிகை சோனாலி போகத் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். பின்னர் நடிகையானார். 2020-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சோனாலி போகத் கலந்து கொண்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த சோனாலி, 2019-ல் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஹரியானாவின் ஆதம்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் மீண்டும் பாஜக வேட்பாளராக சோனாலி களமிறங்குவார் என கூறப்பட்டது.

மர்ம மரணம்
ஹரியானாவின் பாஜக பிரமுகர்களில் ஒருவர் சோனாலி போகட். கடந்த ஆகஸ்ட் 22-ந் தேதி கோவா சென்ற சோனாலி போகட், மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சோனாலி போகட் மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் கொடுத்தனர்.

கொலை என சந்தேகம்
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடந்து சோனாலியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை கோவாவிலேயே நடந்தது. அப்போது சோனாலியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் சோனாலி கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுத்தது.

கைது நடவடிக்கைகள்
பின்னர் சோனாலியின் உதவியாளர்கள் சுதிர், சுக்விந்தர் ஆகியோரை போலீசார் வளைத்துப் பிடித்து விசாரித்தனர். இருவரும் இணைந்தே சோனாலியை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து மிரட்டி உள்ளனர். பின்னர் சோனாலியை இருவரும் கொலை செய்தனர். இது தொடர்பான விசாரணைகள், கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆக்கிரமிப்பு- தடை
இந்நிலையில் சோனாலி போகட் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கோவா கர்லீஸ் சொகுசு விடுதி, ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக புகார் கூறி அதனை இடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி கர்லீஸ் சொகுசு விடுதி ஆக்கிரமித்து கட்டப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய கோவா ஹோட்டலை இடிக்க இடைக்கால தடை விதித்துள்ளது.


Click it and Unblock the Notifications
