இந்தி திணிப்புக்கு பரிந்துரை தந்த அமித்ஷா குழு- நாட்டையே நாசமாக்கப் போகுது.. ப. சிதம்பரம் எச்சரிக்கை
டெல்லி: இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி மொழியை திணிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளதற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக் குழு தமது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கியது. அமித்ஷா குழுவானது இந்தி மொழி தொடர்பாக அளித்துள்ள பரிந்துரைகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திதான் இனி..
அப்பரிந்துரைகளில், அனைத்து தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களில் இந்தி மொழிதான் பயிற்று மொழியாகவும் இதர பயன்பாடுகளுக்கான மொழியாகவும் இருக்க வேண்டும்; ஆங்கில மொழியை பயன்படுத்துவது ஆப்ஷனலாக மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்புகளில் இந்தி..
ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள், ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா விதியாலயாக்கள், மத்திய பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் இந்தி மொழி பயிற்று மொழியாக கட்டாயமாக்க வேண்டும். தேவைப்பட்டால்தான் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக பயன்படுத்தலாம்; காலப்போக்கில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயீற்று மொழியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்கிறது அமித்ஷா குழுவின் பரிந்துரை. அதேபோல், வேலைவாய்ப்பு தேர்வுகளிலும் இந்தி மொழி அவசியமாக்கப்பட வேண்டும். பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தி மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிறது இக்குழு பரிந்துரை. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டுமாம்.

நீதிமன்ற மொழி
இந்தி பேசும் மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தில் இந்தி இடம்பெற வேண்டும்; அரசியல் சாசன தேவை ஏற்பட்ட்டால் மட்டுமே ஆங்கில மொழி பெயர்ப்பை பயன்படுத்த வேண்டும்; விளம்பரங்கள் அனைத்தும் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் இடம்பெற வேண்டும்; ஆங்கில விளம்பரங்கள் சிறியதாகத்தான் இருக்க வேண்டும் எனவும் அமித்ஷா குழு பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்திலும், அமைச்சரவை இலாகாக்கள் அனைத்திலும் கடிதங்கள், பேக்ஸ்கள், இ மெயில்கள் இந்தியில்தான் இருக்க வேண்டும்; அலுவலக பயன்பாட்டுக்கு எளிதான இந்தி பயன்படுத்த வேண்டும். மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள், உரைகள் அனைத்தும் இந்தியில் இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது அமித்ஷா குழு.

ப.சி. கடும் எதிர்ப்பு
அமித்ஷா குழுவின் இந்த பரிந்துரைகளுக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வு மொழிக் குழுவின் பரிந்துரைகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த செய்தி சரியானதுதான் எனில், இந்தி மொழி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கும் மோடி அரசின் நடவடிக்கை இது என்பதற்கு சான்றாகும். இந்தியாவில் இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் அமித்ஷா தலைமையிலான குழுவின் இந்த அறிக்கையை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நிராகரிக்கவே செய்வார்கள். மோடி அரசாங்கத்துக்கும் இந்தி பேசாத மாநிலங்களுக்கும் இடையேயான இந்த மோதல் ஒட்டுமொத்த நாட்டையே நாசமாக்கிவிடும். இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications