ரயில் நிலைய குடிநீரில் மனித மல பாக்டீரியா.. அதிர்ச்சியளிக்கும் சி.ஏ.ஜி அறிக்கை வெளியீடு!
டெல்லி: இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீரின் தரம் குறித்து மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 512 முக்கிய ரயில் நிலையங்களில் ஆய்வு செய்ததில், பெரும்பாலான நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்பதும், குடிநீரில் ஆபத்தான பாக்டீரியாக்கள் கலந்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.

குடிநீரில் ஆபத்தான 'இ-கோலை' பாக்டீரியா
ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள 'வாட்டர் கூலர்' எனப்படும் குளிர் குடிநீர் இயந்திரங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதித்ததில், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இ-கோலை எனப்படும் மனித மல பாக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் உள்ள கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு, மத்திய ரயில்வேயில் மும்பை சி.எஸ்.எம்.டி, கல்யாண், லோனாவாலா, பிவாண்டி ரோடு, தென் மத்திய ரயில்வேயில் ஹைதராபாத் மற்றும் கிழக்கு ரயில்வேயில் மதுபூர் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள குடிநீரில் இந்த பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, பல மண்டலங்களில் உள்ள 59 ரயில் நிலையங்களில் குடிநீர் தரப் பரிசோதனையே செய்யப்படவில்லை என்பதும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும், 2022-23 மற்றும் 2023-24 காலகட்டத்தில் பல்வேறு ரயில் நிலைய நடைமேடை குழாய்களில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளிலும் உடலுக்கு ஒவ்வாமை மற்றும் வயிற்றுப்போக்கை உண்டாக்கக்கூடிய கோலிபார்ம் பாக்டீரியாக்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
89% ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை
ரயில்வே வாரியம் 2018-ஆம் ஆண்டிலேயே அனைத்து ரயில் நிலையங்களிலும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், தணிக்கை செய்யப்பட்ட 512 நிலையங்களில் 458 நிலையங்களில் (89 சதவீதத்திற்கும் மேல்) இந்த அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லை அல்லது தரமற்ற நிலையில் உள்ளன.
சுத்தமான குடிநீர், கழிப்பறைகள், நிழற்குடைகள், மின்விசிறிகள், இருக்கைகள், நடைமேடை மேம்பாலங்கள் மற்றும் தகவல் பலகைகள் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கூட பல இடங்களில் பூர்த்தி செய்யப்படவில்லை.
முக்கிய பெருநகர நிலையங்களிலும் குறைபாடுகள்
கிராமப்புற நிலையங்கள் மட்டுமின்றி, அதிக வருவாய் ஈட்டும் நாட்டின் முன்னணி ரயில் நிலையங்களான டெல்லி, மும்பை சென்ட்ரல், ஹவுரா, சீல்டா மற்றும் மும்பை சி.எஸ்.எம்.டி போன்ற இடங்களிலேயே இருக்கைகள், போதுமான குடிநீர் குழாய்கள், கழிவறை வசதிகள் மற்றும் குப்பைத் தொட்டிகள் பற்றாக்குறையாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் தரவுகளை ஆய்வு செய்ததில்:
2,035 நிலையங்களில் போதுமான குடிநீர் குழாய்கள் இல்லை.
403 நிலையங்களில் சிறுநீர் கழிப்பிட வசதிகள் குறைவாக உள்ளன.
201 நிலையங்களில் கழிப்பறை வசதிகள் பற்றாக்குறையாக உள்ளன.
சிஏஜி பரிந்துரை
ரயில் பயணிகளின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய, குடிநீர் விநியோக முறைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு விதிகளின்படி அனைத்து நிலையங்களிலும் குடிநீரை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என்றும் சிஏஜி ரயில்வே அமைச்சகத்தை கடுமையாக வலியுறுத்தியுள்ளது. தினசரி 20 கோடிக்கும் அதிகமான பயணிகள் ரயில்களை நம்பியிருக்கும் நிலையில், இந்த குறைபாடுகளை ரயில்வே நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
