ஒரு முடிவுக்கு வாங்கப்பா.. முடியல.. மத்திய அரசு மற்றும் ட்விட்டருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளைக் கண்காணிக்க, வழிமுறைகளை உருவாக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய அரசு மற்றும் ட்விட்டருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் சமூக வலை தளங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். அவற்றைப் உபயோகிக்கும் ஆர்வம் ஒருபக்கம் இருந்தாலும், வெறுப்புகளை உமிழும் கருத்துகளும், வன்முறையைத் தூண்டுவது போன்ற ட்வீட்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில், அவதூறு பேச்சுக்கள், வெறுப்பு ட்வீட்களை உடனே நீக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும் மத்திய அரசு ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது.

கோபத்தில் அரசு
இதையடுத்து சில கணக்குகளை முடக்கிய ட்விட்டர், சம்பந்தப்பட்ட நபர்கள் அவர்கள் சார்பில் அளித்த விளக்கத்தை ஏற்று, மீண்டும் அந்த கணக்குகள் இயங்க அனுமதித்தது. இதனால் மத்திய அரசுக்கும், ட்விட்டர் நிர்வாகத்துக்கும் மோதல் வெடிக்கத் தொடங்கியது. சில ட்விட்டர் உயர் அதிகாரிகள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோரிக்கை
இப்படி சமூக தளங்களுக்கென வழிகாட்டுதலோ, கண்காணிப்போ, சென்சார் முறையோ இங்கு இல்லை. இவற்றை கண்காணித்து நெறிப்படுத்தும் வழிகளை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கண்காணிப்பு
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும், ஆபாசக் கருத்துக்களை நீக்கவும், இதுபோன்ற கருத்துக்கள் இடம்பெறாத வகையில் கண்காணிக்கவும், வழிமுறைகளை உருவாக்கக் கோரி மும்பையைச் சேர்ந்த வினீத் கோயங்கா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ட்விட்டருக்கு நோட்டீஸ்
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்களைக் கண்காணிக்க சரியான வழிமுறை இல்லாததால், அதை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு, நாட்டுக்கு எதிராக பலரும் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் கருத்துக்கள் பரப்பப்படுகிறது. எனவே இதை கட்டுப்படுத்தி, கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக இது தொடர்பாக ஒரு வழிமுறையை உருவாக்க உத்தரவிட வேண்டும்". எனக் கோரப்பட்டிருந்தது
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.