18 குழந்தைகளை பலி வாங்கிய இருமல் டானிக்.. சாட்டையை சுழற்றிய மத்திய அரசு.. மருந்து நிறுவனத்திற்கு செக்
டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை எடுத்துக்கொண்டதில் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த மருந்து நிறுவனத்தின் மீது முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
உஸ்பெகிஸ்தானில் மருந்து கடைக்காரர்களின் பரிந்துரையின் பெயரில் Doc-1 Max எனும் இருமல் மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மருந்து கொடுக்கப்படும் அளவும் மருத்துவரின் பரிந்துரையைவிட அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் மருந்தை எடுத்துக்கொண்ட குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி சரிந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து ஒவ்வொரு குழந்தைகளாக உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 18 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துதான் காரணம் என்று உறுதி செய்யப்பட்டது.

உயிரிழப்பு
இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது, "18 குழந்தைகள் உயிரிழப்புக்கு Doc-1 Max எனும் இருமல் மருந்துதான் காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்த மருந்து இந்தியாவின் நொய்டாவில் தயாரிக்கப்படுகிறது. இம்மருந்தை பெற்றோர்கள் 2.5ml முதல் 5ml வரை தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 4 வேளை வரை கொடுத்திருக்கிறார்கள். இப்படியே 2 முதல் 7 நாட்கள் வரை இந்த மருந்தை கொடுத்திருக்கிறார்கள். இதனையடுத்துதான் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

விசாரணை
உயிரிழப்பையடுத்து இந்த மருந்தை நாங்கள் ஆய்வுக்கு அனுப்பினோம் அதில் 'எத்திலின் க்ளைக்கால்' எனும் நச்சு கலந்திருப்பது தெரிய வந்தது. உடனே நாடு முழுவதும் உள்ள மருந்து கடைகளிலிருந்து இந்த மருந்து திரும்ப பெறப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். அதேபோல இந்திய அரசும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சுகாதாரத்துறை தொிவித்துள்ளது. இந்த இருமல் மருந்தை நொய்டாவில் உள்ள 'மரைன் பயோடெக்' எனும் நிறுவனம்தான் தயாரித்து விநியோகித்திருக்கிறது. உஸ்பெகிஸ்தானின் குற்றச்சாட்டையடுத்து மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, உத்தரப் பிரதேச மருந்து கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் ஆகியவை இணைந்து விசாரணை நடத்தும் என்று இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அதிரடியாக இந்த 'மரைன் பயோடெக்' நிறுவனத்தில் சோதனையை மேற்கொண்டது. இதனையடுத்து Doc-1 Max மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது 'மரைன் பயோடெக்' நிறுவனத்தின் அனைத்து மருந்து உற்பத்தியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னர்
இந்திய தயாரிப்பு மருந்துகளை உட்கொண்டு குழந்தைகள் இறப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் திடீரென குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்த பின்னரும் குழந்தைகளின் உடல் நலனில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து அவர்களில் சிலரின் உடல் நிலை திடீரென மோகமாகி ஒவ்வொருவராக உயிரிழக்க தொடங்கினர். மொத்தமாக 66 பேர் இவ்வாறு உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து இந்திய மருந்துகள் குறித்து அச்சம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications