குறைந்தபட்ச ஆதார விலைக்கு ரூ2.25 லட்சம் கோடி- விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகிறது: பிரதமர் மோடி
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு ரூ2.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பதால் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
நாடாளுமன்றம் லோக்சபாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பல்வேறு புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
அதேநேரத்தில் மாத ஊதியதாரர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்பை இந்த பட்ஜெட் நிறைவேற்றவில்லை என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்ஜெட்டை மிகவும் பாராட்டியுள்ளார்.

பட்ஜெட்டுக்கு பாராட்டு
பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: மக்கள் நலனுக்காக, மிகவும் முற்போக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது பாராட்டுகள். மத்திய பட்ஜெட் குறித்து விரிவாக பேச வேண்டும் என பாஜக அழைப்பு விடுத்துள்ளது. நாளை காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் குறித்து விரிவாக பேச உள்ளேன்.

எல்லை கிராமங்கள்
நாட்டிலேயே முதல் முறையாக பார்வத் மாலா திட்டம் ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர்,வடகிழக்கு மாநிலங்களில்தான் தொடங்கப்பட்டது. மலை பிரதேசங்களுக்கும் நவீன போக்குவரத்து வசதிகளை இந்த திட்டம் ஏற்படுத்தி தருகிறது. இதன் மூலம் எல்லை கிராமங்கள் மேம்பாடு அடையும்.

விவசாயிகள் வருவாய் இரட்டிப்பு
கங்கை நதியை தூய்மைப்படுத்துதலுடன் கங்கை நதி கரைகளில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்க மாநிலங்களின் விவசாயிகளுக்கு உதவக் கூடியதாகும். இதன் மூலம் வேதிநச்சுப் பொருட்கள் கலக்காத கங்கையை நாம் காண முடியும். விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்துக்காக ரூ2.5 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதால் விவசாயிகளின் வருவாய் இரண்டு மடங்கு அதிகரிக்கும். சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.

இளைஞர்களுக்கு பிரகாசமான வாழ்க்கை
மக்களுக்கு நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்திருக்கிறது இந்த பட்ஜெட். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பட்ஜெட்டாக உள்ளது. கூடுதல் முதலீடு, கூடுதல் கட்டமைப்பு ஆகியவற்றுடன் புதிய வேலைவாய்ப்புகளையும் இளைஞர்களுக்கு வழங்கி உள்ளது இந்த பட்ஜெட். இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க இந்த பட்ஜெட் வழிவகை செய்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications