மாநில மொழிகளின் நண்பன் “இந்தி”.. நாட்டை ஒற்றுமைபடுத்தும் “அலுவல்” மொழி இதுதான் - அமித்ஷா வாழ்த்து
டெல்லி: அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒற்றுமை என்னும் கயிற்றில் இணைக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவின் சில மாநிலங்களில் பேசப்படும் மொழியான இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி தினத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரா மோடி உள்ளிட்ட தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களையும், இந்தியின் பெருமைகளையும் பேசி வருகின்றனர்.

அமித்ஷா வாழ்த்து
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தின வாழ்த்தை பகிர்ந்துள்ளார். அதில், "அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒற்றுமை என்னும் கயிற்றில் இணைக்கிறது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் தோழன் இந்திதான். மோடி அரசாங்கம் இந்தி உட்பட அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறது. இந்தியை பாதுகாக்கவும், பிரபலப்படுத்துவும் பங்காற்றியவர்களுக்கு வணக்கம்." என்றார்.

அலுவல் மொழிக்குழு
கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற 37 வது நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு கூட்டத்தில் இந்தி தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. "அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்து உள்ளார். 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை கட்டாயம் வழங்க வேண்டும்.

இந்தியில் பேச வேண்டும்
அலுவல் மொழியான இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கியமான அங்கமாக மாற்றுவதற்கான நேரம் இது. இந்தி மொழியை நாம் கொண்டு வருவது உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும். பல்வேறு மொழிகளை பேசும் மாநில மக்கள் தங்களுக்கு இடையே உரையாடும்போது இந்தியில் பேச வேண்டும்." என்றார்.

கடும் எதிர்ப்பு
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இன்று கர்நாடகாவில் இந்தி தினம் கொண்டாட அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications