கிளம்பி போங்க.. ஆள் அனுப்பிய அமித் ஷா.. நோ சொல்லாமல் நின்ற ராகுல்.. மீண்டும் ஆள் அனுப்பிய அமித் ஷா
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க் முன்பாக, காங்கிரஸ் தலைவர்கள் நடத்தி வரும் தர்ணா போராட்டத்தில் திடீர் திருப்பமாக உயர்மட்ட அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் நேரடியாக ஆலோசனை நடத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர்டாக்டர் ஜிதேந்திர சிங், அதைத் தொடர்ந்து உடனடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்திற்குச் சென்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அவர் மீண்டும் போராட்டக் களத்திற்கே திரும்பி வந்து ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் நடக்கும் இந்த உயர் மட்ட ஆலோசனைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி என்ன?
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர் அமைப்பான காக்ரோச் ஜனதா கட்சி நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணியில் காவல்துறையினர் நடத்திய கொடூரத் தடி அடியைக் கண்டித்தும் இந்த போராட்டம் வெடித்தது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பிரதமர் இல்லத்தைச் சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடனடியாகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
தொடரும் சமரச முயற்சிகள்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், எதிர்க்கட்சிகளின் இந்த அதிரடிப் போராட்டத்தால் அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், போராட்டத்தை அமைதி வழியில் முடிவுக்குக் கொண்டு வரவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
முதல் கட்ட பேச்சுவார்த்தை
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை லோக் கல்யாண் மார்க் பகுதிக்கு நேரில் வந்தனர். சாலையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தியுடன் ஜிதேந்திர சிங் சில நிமிடங்கள் தனியாகப் பேசினார். அப்போது காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார்.
அமித் ஷாவுடன் அவசர ஆலோசனை
ராகுல் காந்தியுடனான சந்திப்பு முடிந்த உடனடியாக, அமைச்சர் ஜிதேந்திர சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு போராட்டக்களத்தின் தற்போதைய சூழல், எதிர்க்கட்சிகளின் பிடிவாதம் மற்றும் அரசின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அமித் ஷாவிடம் விரிவாக விளக்கினார்.
மீண்டும் போராட்டக் களத்திற்கு வருகை
அமித் ஷாவுடனான உயர்மட்ட ஆலோசனையைத் தொடர்ந்து, ஜிதேந்திர சிங் மீண்டும் பிரதமர் இல்லத்தின் முன் உள்ள காங்கிரஸ் போராட்டக் களத்திற்கே நேரடியாகத் திரும்பினார். தற்போது மீண்டும் அவர் ராகுல் காந்தியுடன் பேசி வருகிறார்.
மத்திய அரசின் மூலம் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தபோதிலும், காங்கிரஸ் தலைவர்கள் தங்களது கோரிக்கைகளில் உறுதியாக உள்ளனர். நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் குரலை ஒடுக்க நினைக்கும் இந்த அரசுக்கு நாடாளுமன்றத்திலும், தெருவிலும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதால், லோக் கல்யாண் மார்க் பகுதியில் டெல்லி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளனர்.
மத்திய அமைச்சரின் இந்தத் தொடர் தூதுவப் பேச்சுவார்த்தைகள் மூலம் போராட்டம் முடிவுக்கு வருமா அல்லது நாடாளுமன்ற முடக்கம் மேலும் தீவிரமடையுமா என்பது அடுத்த சில மணி நேரங்களில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications
