குறிவைக்கும் அமெரிக்கா.. 25 ஆண்டுகளுக்கு முன்பே உடைத்தெறிந்த இந்தியா! அப்போ என்ன நடந்தது தெரியுமா?
டெல்லி: ரஷ்யாவை முடக்க நினைக்கும் அமெரிக்கா, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் வரி விதிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வரும் நிலையில், இது முக்கியமானதாக மாறியிருக்கிறது. அதேநேரம் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா இதுபோல நடவடிக்கை எடுப்பது இது முதல்முறை இல்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக 100% வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு வழங்கும் சட்டம் தற்போது அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகமாக வாங்கும் முக்கிய நாடுகளின் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது.

ரஷ்ய கச்சா எண்ணெய்
இதனால் இந்தியாவும் இதனால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. அதேநேரம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு வாங்கும் அனைத்து நாடுகளுக்கும் தானாக இந்த வரி அமலுக்கு வந்துவிடாது. மாறாக அதிபர் டிரம்ப் எந்த நாட்டிற்கு வரி விதிக்க வேண்டும் என நினைக்கிறாரோ.. அந்த நாட்டிற்கு மட்டும் வரி விதிக்கப்படும்.
அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கை இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்கா தான் இந்தியாவின் மிக பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்து வருவதால், ஒருபுறம் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அதேநேரம் மறுபுறம் அமெரிக்க சந்தையுடனான வர்த்தகத்தையும் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா
இதற்கிடையே இந்தியா தனது வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும், புதிய சட்டத்தின் தாக்கத்தை ஆய்வு செய்து வருவதாகவும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஆனால், அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்தை இந்தியா எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற கடுமையான அமெரிக்க தடைகளை இந்தியா எதிர்கொண்டது.
அதாவது 1998 மே 11ஆம் தேதி ராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியா அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. இதையடுத்து அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அரசு, இரண்டே நாட்களில் அதாவது மே 13ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுக்கான பெரும்பாலான வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டன. அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ராணுவ சேவைகள் தொடர்பான விற்பனையும் தடை செய்யப்பட்டது.
இந்தியா
மேலும், அமெரிக்க அரசு வழங்கும் கடன் மற்றும் நிதியுதவிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், சர்வதேச நிதி நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கு வழங்கப்படும் சில கடன்களுக்கும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. குறிப்பாக பாதுகாப்பு துறை கொள்முதல் சிக்கலானது. சில உள்கட்டமைப்பு திட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும், இந்தியா தனது பொருளாதார சீர்திருத்தத்தை கைவிடவில்லை.
அப்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், அணு ஆயுத சோதனை இந்தியாவின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். மேலும், அமெரிக்காவின் தடைகளால் இந்தியா அச்சமடையாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். அதே நேரத்தில் அமெரிக்காவுடனான தொடர்பை இந்தியா முற்றிலும் துண்டிக்கவில்லை. மாறாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன. இதன் காரணமாக இரு நாட்டு உறவுகளில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டது.
என்ன நடந்தது!
1998ல் விதிக்கப்பட்ட தடைகள் பல ஆண்டுகள் நீடித்த நிலையில், 2001 செப்டம்பர் 22ஆம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இந்தியா மீதான தடைகளில் இருந்த முக்கிய கட்டுப்பாடுகளை நீக்குவதாக அறிவித்தார். அதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அதன் பிறகு இந்தியா-அமெரிக்க உறவு வேகமாக சீரானது. தொடர்ந்து 2008ஆம் ஆண்டு இந்தியா அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் ஒருகாலத்தில் அணு ஆயுத சோதனைக்காக இந்தியாவுக்கு தடைகள் விதித்த அமெரிக்காவே, பின்னர் இந்தியாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பை மேற்கொண்டது.
இப்போது மீண்டும் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் அமெரிக்காவின் அழுத்தத்தை இந்தியா எதிர்கொள்கிறது. புதிய சட்டம் உடனடியாக 100% வரியை விதிப்பதாக இல்லை என்றாலும், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிச்சயமற்ற சூழலை இது உருவாக்கியுள்ளது.
உணர்த்துவது என்ன
அதேநேரம் 1998 முதல் 2001 வரையில் நடந்த விஷயங்கள் நமக்கு ஒரு விஷயத்தை தெளிவாக காட்டுகிறது. பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களில் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும், இந்தியா- அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்தது. அதுவே நிலைமை சீராக உதவியது. தற்போதும் எரிசக்தி பாதுகாப்பு, ஏற்றுமதி சந்தை மற்றும் இருதரப்பு உறவு ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் சமநிலைப்படுத்த வேண்டிய சவால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
