உஷார்.. அடுத்த 40 நாட்கள் முக்கியம்.. இந்தியாவில் கொரோனா கேஸ் அதிகரிக்க வாய்ப்பு.. வெளியான தகவல்
டெல்லி: சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வரும் உருமாற்றம் அடைந்த பி.எஃப் 7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவை பொறுத்த அளவில் அடுத்த 40 நாட்கள் அதிக கேஸ்கள் பதிவாக வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றானது பின்னர் உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து தடுப்பூசி காரணமாக தொற்று பாதிப்பு கட்டுபடுத்தப்பட்ட நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்த பி.எஃப்-7 வகை கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.
இந்தியாவில் இதன் பரவலை தடுக்க மத்திய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் சுமார் 2 சதவிகித பயணிகளுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த 2 சதவிகித பயணிகள் யார் என்பதை விமானத்தின் பணியாளர்கள் குழு முடிவு செய்யும். இந்தில் உள்நாடு வெளிநாடு பயணிகள் பாகுபாடு இருக்காது என்றும் சொல்லபட்டது. இதற்கான விரிவான வழிக்காட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.

சோதனை
இப்படியாக கடந்த 2 நாட்களில் 6,000 பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 39 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல தொற்று பாதிப்புகளை எதிர்கொள்ள முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும் தொற்று பாதிப்பை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பையடுத்து டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஒத்திகை
இந்த ஆய்வின்போது கொரோனா வார்டுகள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆக்சிஜன் அளவு, பிபிஇ கிட்கள், தூய்மை பணியாளர்கள், ஆம்புலன்ஸ் வசிதி உட்பட அனைத்தும் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாண்டவியா, "இந்த ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருப்பதாக கூறினார். இதேபோல டெல்லியின் லோக் நாயக்ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் டெல்லி முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆய்வு மேற்கொண்டார். டெல்லி மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா போன்ற தென் மாநிலங்களிலும் ராஜஸ்தான், குஜராத் போன்ற வட மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டை பொறுத்த அளவில் நேற்று(டிச.27) சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிசெய்தார். நாடு முழுவதும் இவ்வாறு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கையில் தற்போது மற்றொரு செய்தி வந்திருக்கிறது. அதாவது அடுத்த 40 நாட்களில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிகை வேகமாக அதிகரிக்கலாம் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எச்சரிக்கை
ஜனவரியில் இந்தியா அதிகபட்ச கொரோனா தொற்று பாதிப்பை பதிவு செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் முன்பு கிழக்கு ஆசிய பகுதிகளை தாக்கிய கொரோனா தொற்று 30-35 நாட்களில் இந்தியாவிலும், புதிய அலையை உருவாக்கியுள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவை பொறுத்த அளவில் தற்போது வரை 4.4 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 188 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையானது 3,468 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications