விவசாயிகள் திட்டமிட்டு படுகொலை: சத்தீஸ்கர், பஞ்சாப் முதல்வர்களுடன் லக்கிம்பூர் செல்வேன்-ராகுல் உறுதி
டெல்லி: விவசாயிகள் திட்டமிட்டு கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட உ.பி. மாநிலம் லக்கிம்பூருக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் குழுவுடன் தாம் திட்டமிட்டபடி பயணம் செய்வேன் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக உ.பி. மாநிலத்தின் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 4 விவசாயிகள் உயிரிழ்ந்துள்ளனர்.
லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். அகிலேஷ் யாதவும் ஏற்கனவே தடுத்து நிறுத்தப்பட்டார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலும் லக்னோ விமான நிலையத்தில் தடுக்கப்பட்டார்.

லக்கிம்பூர் செல்லும் ராகுல் குழு
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு லக்கிம்பூர் செல்ல உ.பி. அரசிடம் அனுமதி கோரியது. காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் இதற்கான அனுமதியை கோரியிருந்தார். ஆனால் உ.பி.மாநில அரசு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் லக்கிம்பூர் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என மறுத்துவிட்டது.

லக்கிம்பூர் செல்வதை தடுக்க முடியாது- ராகுல்
இதனிடையே டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது; பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்ட 5 பேர் குழுவுடன் இன்று லக்கிம்பூர் செல்கிறேன். நாங்கள் லக்கிம்பூர் செல்வதை யாராலும் தடுத்துவிட முடியாது. விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்துள்ளனர். இது திட்டமிட்ட படுகொலை.

அமைச்சர் மகனுக்கு தொடர்பு
உத்தரப்பிரதேச மாநிலத்துக்குச் சென்ற பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. இந்த படுகொலை சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்த படுகொலை குறித்து ஊடகங்கள்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் எங்களை அரசியல் செய்வதாக ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
Recommended Video

போலீசார் திட்டவட்டம்
அதேநேரத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட குழுவினரை லக்கிம்பூர் செல்ல அனுமதிக்க முடியாது என லக்னோ போலீஸ் கமிஷனர் டிகே தாக்கூர் உறுதியாக கூறியுள்ளார். இது தொடர்பாக டிகே தாக்கூர் கூறுகையில், ராகுல் காந்திக்கு மாநில அரசு அனுமதி மறுத்திருக்கிறது. லக்னோ விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி வந்தால் அவரிடம் லக்கிம்பூர் செல்ல வேண்டாம் என எடுத்துச் சொல்வோம். லக்கிம்பூர் மற்றும் பிரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள சீதாப்பூர் போலீஸ் எஸ்.பி.க்கள், ராகுல் காந்தியை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். அதனடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications