"பிரதமர் நரேந்திர மோடி சொன்னது 100% சரி.." பாராட்டி தள்ளிய அமெரிக்க நிதியமைச்சர்! ஏன் முக்கியம்
டெல்லி: அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெலன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக பாராட்டிப் பேசியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவு சமீப ஆண்டுகளில் நெருக்கமான ஒன்றாக வருகிறது. பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே அமெரிக்கா எடுத்து வருகிறது.
ஒரு பக்கம் ரஷ்யா உடன் நெருக்கம் காட்டும் அதே சூழலில், மறுபுறம் அமெரிக்கா உடனான உறவையும் இந்தியா சிறப்பாகவே கையாண்டு வருகிறது.
வணக்கம் தமிழ்நாடு- திண்டுக்கல் வரவேற்பால் அகமகிழ்ந்தேன்: பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தமிழில் ட்வீட்

அமெரிக்க நிதி அமைச்சர்
இந்தச் சூழலில் அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெலன் ஒரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க-இந்தியா பொருளாதார உறவு குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசிய ஜேனட் யெலன், "இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தான் வரும் காலத்தில் உலகப் பொருளாதாரத்தின் பாதையைத் தீர்மானிக்கும்.

பொருந்தும்
இந்தோ-பசிபிக் பகுதியின் செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்கும் கூட இதுவே பொருந்தும். வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியாவும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவும் இணைந்து உலகின் தீர்க்கவே முடியாத பிரச்சனைகளில் தீர்வு காண முயலலாம். இதற்கான சிறப்பான வாய்ப்பு நமக்கு அமைந்துள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் கொள்கை வேறுபாடுகளைக் கடந்து பொதுவான நோக்கங்களுக்காக எப்படி இணைந்து செயல்பட முடியும் என்பதற்கு இந்த உறவே சிறந்த எடுத்துக்காட்டு.

ரஷ்யா உதாரணம்
தவறான எண்ணம் கொண்ட நாடுகள் எப்படி தங்கள் அதிகாரங்களைத் தப்பாகப் பயன்படுத்தும் என்பதற்கு ரஷ்யா ஒரு மிகச் சிறந்த உதாரணம். புவிசார் அரசியல் செல்வாக்கு அல்லது சொந்த லாபத்திற்காக அவர்கள் இரு நாடுகள் இடையேயான வர்த்தகத்தைக் கூட சீர்குலைப்பார்கள் என்பதற்கு ரஷ்யா மிகச் சிறந்த உதாரணம். ரஷ்யாவின் போரை நாம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். உலகப் பொருளாதாரத்திற்கு உதவ நாம் செய்யக்கூடிய ஒரே சிறந்த விஷயம் இதுவாகும்.

பிரதமருக்கு பாராட்டு
நான் மட்டுமின்றி உலகின் டாப் பொருளாதார நாடுகளின் எண்ணமும் இதுதான். பிரதமர் நரேந்திர மோடி இது போருக்கான காலம் இல்லை என்று கூறியது சரிதான். இப்போது நாம் சில கடினமான நேரங்களை எதிர்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த சவால்கள் தான் இந்தியாவையும் அமெரிக்காவையும் முன்பைவிட நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது என்று நான் நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

ஏன் முக்கியம்
இந்தியா- ரஷ்யா உறழு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் தான் கூறியிருந்த நிலையில், அமெரிக்க நிதியமைச்சரின் இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அமைச்சர் ஜெய்சங்கர் மேலும், "ரஷ்யா எப்போதுமே இந்தியாவின் நிலையான பாட்னராக இருந்து உள்ளது. பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் இந்தியாவுக்கு ரஷ்யா துணையாக இருந்து உள்ளது. இந்த உறவால் இரு நாடுகளும் பயன்பெற்றுள்ளது" என்றார்.

ஒப்புகொண்ட அமெரிக்கா
கடந்த காலத்தில் இந்தியாவுக்குத் தேவைப்படும் போது அமெரிக்கா உதவத் தவறிவிட்டது உண்மைதான் என்று அந்நாட்டின வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்திருந்தார். அவர் மேலும் கூறுகையில், "ரஷ்யாவுடனான இந்தியா உறவு பல தலைமுறையாக உள்ளது. பனிப்போர் காலத்தில் இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியாகவோ அல்லது ராணுவ ரீதியாகவோ அமெரிக்காவால் உதவ முடியவில்லை. இதுவே ரஷ்யா உடனான இந்தியாவின் உறவுக்கு காரணமாக அமைந்துவிட்டது" என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.