கோரிக்கை மனு எதையும் வழங்கவில்லை.. பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பில் என்ன நடந்தது?
டெல்லி : டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு எதையும் தரவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்ததற்காக பிரதமர் மோடிக்கு, டெல்லிக்கே சென்று நன்றி தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவே சென்னை திரும்பினார் ஸ்டாலின்.

முதல்வரின் டெல்லி பயணம்
சென்னையில் கடந்த ஜூலை 28-ம் தேதி நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிலையில், பிரதமரைச் சந்தித்து, நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, முதல்வரின் செயலர்கள் சென்றனர். நள்ளிரவில் தலைநகர் டெல்லி சென்று சேர்ந்தார் முதல்வர் ஸ்டாலின்.

குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
இதையடுத்து, நேற்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளின் தொகுப்பு அடங்கிய ‘ஹோம் ஆஃப் செஸ்' என்ற நூலையும், தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்கள் அடங்கிய பெட்டகத்தையும் குடியரசுத் தலைவருக்கு முதல்வர் பரிசளித்தார்.அதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்த முதல்வர், அவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

அரை மணி நேரம்
அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு வந்து போட்டியை தொடங்கி வைத்ததற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடிக்கு பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள் அடங்கிய நினைவுப் பரிசு மற்றும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுகள் அடங்கிய தொகுப்பு நூல் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

கோரிக்கை மனு அளிக்கவில்லை
பிரதமர் உடனான இந்தச் சந்திப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு எதையும் அளிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ஏற்கெனவே பிரதமரிடம் தமிழக நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை எடுத்து வைத்துள்ளேன். அவற்றில் இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. எனவே, அதையும் நினைவூட்டி, சில கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவிக்க இருக்கிறேன் எனக் கூறியிருந்தார்.

நினைவூட்டல் மட்டும்
ஆனால், பிரதமரிடம் எந்தக் கோரிக்கை மனுவையும் ஸ்டாலின் அளிக்கவில்லை. வாய்மொழியாகவே சில வேண்டுகோள்களை மட்டும் முன்வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருவது, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் பேசும்போது வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பிரதமர், பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications