"வறுமை ஒழிப்பில் இந்தியா வேற லெவல்! 41 கோடி பேர் மீட்பு, ஆனால்.." கடைசியில் ட்விஸ்ட் வைத்த ஐநா
டெல்லி: இந்தியாவில் உள்ள ஏழ்மை நிலை குறித்தும், கடந்த 15 ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் நடந்து உள்ளது என்பது குறித்தும் ஐநா புதிய அறிக்கை வெளியிட்டு உள்ளது.
உலக நாடுகள் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளால் ஒவ்வொரு ஆண்டும் ஏழ்மை நிலையில் இருந்து பல லட்சம் மக்கள் வெளியேறி வருகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு வருகிறது.
இதற்காக பல்வேறு உலக நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சீனா, தனது நாட்டில் இருந்து ஏழ்மை நிலையை முற்றிலுமாக அழித்துவிட்டதாகக் கூறி இருந்தது.
இந்தியா பிரிந்து விடக் கூடாது.. இணைப்பு மொழி ஆங்கிலம்தான்.. திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்

41.5 கோடி பேர்
இதற்கிடையே ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து புதிய வறுமைக் குறியீட்டை (Multidimensional Poverty Index) வெளியிட்டு உள்ளது. அதில் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் இந்தியா 41.5 கோடி பேரை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டு உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது. அதாவது 2005 முதல் 2019 வரை இந்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் 41.5 கோடி பேரை ஏழ்மை நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தான் அதிகம்
அதேநேரம் இன்னும் கூட உலகிலேயே ஏழ்மை நிலையில் அதிக மக்களைக் கொண்ட நாடாக இந்தியா தான் இருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 22 கோடி பேர் ஏழ்மை நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தபடியாக நைஜீரியாவில் 9.6 கோடி பேர் ஏழ்மை நிலையில் உள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது. மொத்தம் 111 நாடுகளில் பல்வேறு தரவுகளை வைத்து ஆய்வு செய்ததில் ஐநா இந்தத் தகவலைத் தெரிவித்து உள்ளது.

குழந்தைகள்
ஒட்டுமொத்தமாக உலகில் 120 கோடி மக்கள், அதாவது சுமார் 19.1% பேர், கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். இவர்களில் சரி பாதிப் பேர் அதாவது 60 கோடி பேர் 18 வயதுக்குக் கீழான குழந்தைகள் ஆகும். பிராந்தியம் வாரியாக பார்க்கும் போது, சப்-சஹாரா ஆப்பிரிக்கா பகுதியில் அதிகபட்சமாக 57 கோடி பேரும் தெற்காசியாவில் 38 கோடி பேரும் ஏழ்மை நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.

கொரோனா
வறுமை ஒழிப்பில் உலகம் சிறப்பாக பணியாற்றிக் கொண்டு இருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று இதை 3-10 ஆண்டுகள் வரை பின்னோக்கி கூட்டிச் சென்றுவிட்டது. அந்த அறிக்கையில் மேலும், "முன்னேற்றம் இருந்தபோதிலும், இந்தியாவின் மக்கள்தொகை கொரோனா மற்றும் விலைவாசி ஏற்றம் காரணமாக அதிகம் பாதிக்கப்படக் கூடியதாகவே உள்ளது. ஊட்டச்சத்து மற்றும் ஆற்றல் நெருக்கடிகளைச் சமாளிக்கும் உலக நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியா
2019-21ஆம் ஆண்டில் இந்தியாவில் 9.7 கோடி குழந்தைகள் ஏழ்மை நிலையில் உள்ளனர். அதாவது நாட்டில் ஐந்தில் ஒரு குழந்தை (21.8 சதவீதம்) ஏழ்மை நிலையில் உள்ளது.. இது மற்ற நாடுகளை விட அதிகம் ஆகும். ஆண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை விடப் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களே அதிக ஏழ்மை நிலையில் உள்ளன. தெற்காசியாவில் இந்தியாவில் மட்டுமே இதுபோன்ற நிலை உள்ளது.

டாப் 10 மாநிலங்கள்
இந்தியாவின் 90 சதவீத ஏழைகள் கிராமப்புறங்களிலும், 10 சதவீதம் பேர் நகர்ப்புறங்களிலும் வாழ்கின்றனர். நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான மாநிலமாகப் பீகார் தொடர்கிறது. ஜார்கண்ட், மேகாலயா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம், ஒடிசா, சத்தீஸ்கர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை டாப் 10 இடங்களில் உள்ளன. 2015இல் இந்த பட்டியலில் இருந்த மாநிலங்களில் மேற்கு வங்கம் மட்டுமே மட்டுமே முன்னேறி உள்ளது.

சிறப்பு
அதேநேரம் ஏழைகளை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதில் இந்தியாவின் செயல்பாடுகளை மிக சிறப்பாக உள்ளதாக இதில் பாராட்டப்பட்டு உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டுள்ளது. அதேநேரம் இப்போது 2இல் 3 குடும்பங்களில் ஒருவருக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.