இந்தியாவிற்கு தூது வந்த சீன டிராகன்! பின்னணியில் ரஷ்யா ஆடிய கேம்! மோடி எடுக்க போகும் முக்கிய முடிவு?
டெல்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இயின் டெல்லி பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. திடீரென சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இப்படி டெல்லி வந்தது, சீனாவே இறங்கி வந்து இப்படி பேச்சுவார்த்தைக்கு முன் வருவதும் ஏன் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது... திடீரென வெள்ளை டிராகனை சமாதானத்திற்கு சீனா அனுப்புவதற்கு பின் பல்வேறு காரணங்கள் உள்ளன.. அதில் ரஷ்யாவும் ஒரு காரணம்! இந்த பயணம் ஏன் மேற்கொள்ளப்பட்டது? இதற்கு பின் என்னவெல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்!
Recommended Video
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ கடந்த வியக்கிழமை இரவு 7.45 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தார். டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் சந்திப்பு நடத்தினார். அதேபோல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சந்திப்பு நடத்தினார்.
இரண்டு நாட்டு உறவு, எல்லை பிரச்சனை, பொருளாதார ஒப்பந்தங்கள், காஷ்மீர் விவகாரம், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி இந்த சந்திப்பில் ஆலோசனைகள் செய்யப்பட்டன. சீனா பல முக்கியமான திட்டங்களை மனதில் வைத்து இந்த சந்திப்பை நிகழ்த்தி உள்ளது.

இரண்டு நாட்டு மோதல்
கடந்த 2019 இறுதியில் இருந்தே இரண்டு நாட்டு உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை. இரண்டு நாட்டிற்கும் இடையில் லடாக்கில் கடுமையான மோதல் ஏற்பட்டது. லடாக் தொடங்கி அருணாசலப்பிரதேசம் வரை இரண்டு நாட்டு மோதல் நீண்டது. அதன்பின் இரண்டு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று தற்போது எல்லையில் மோதல் இன்றி உள்ளது. ஆனாலும் அமைதி திரும்பவில்லை. இரண்டு நாட்டு படைகளும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மோதலாம் என்ற நிலையே எல்லையில் நிலவி வருகிறது.

திடீர் பல்டி
இந்த மோதல் சமயத்தில் இந்தியாவிடம் முஷ்டி முறுக்கிய சீனா தற்போது திடீரென இந்தியாவுடன் சமாதானமாக செல்ல துவங்கி உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்கி இ அளித்த பேட்டியில், சீனா இந்தியா இரண்டு நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இரண்டு நாட்டு உறவில் சமீபத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டன. இரண்டு நாட்டு உறவில் இது பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து நேர்மையான, நடுநிலையான பேச்சுக்களை நாம் நடத்த வேண்டும்.

இந்தியா வந்தார்
பிரச்சனைகளுக்கு நாம் அப்படித்தான் தீர்வு காண வேண்டும். நாம் இருவரும் பார்ட்னர்களாக இருக்க வேண்டும், என்று குறிப்பிட்டு சமாதான தூது அனுப்பினார். அதோடு தற்போது இந்தியாவிற்கும் அவர் வருகை புரிந்து உள்ளார். இந்த சந்திப்பிற்கு அவர் கிட்டத்தட்ட அழையா விருந்தாளியாக வந்தார் என்றுதான் கூற வேண்டும். ஆம் இந்தியா அவரை அழைக்கவில்லை. அவராக இந்தியா வருவதாக அறிவித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் நேரம் ஒதுக்கும்படி கேட்டு இந்தியாவிற்கு வந்து இருக்கிறார்.

அழைப்பு விடுத்தார்
இந்தியா வந்ததோடு அல்லாமல் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அடுத்த மாதம் சீனாவிற்கு வரும்படி இவர் அழைப்பு விடுத்து இருக்கிறாராம். அதோடு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை பெய்ஜிங் வரும்படியும் வாங்க் இ அழைப்பு விடுத்து இருக்கிறாராம். மேலும் சீனாவில் இந்த வருடம் இறுதியில் நடக்கும் பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) மாநாட்டில் பிரதமர் மோடியை கலந்து கொள்ள வைக்க வாங்க் இ இந்த சந்திப்பில் முயன்றதாகவும் கூறப்படுகிறது.

பிளான் என்ன?
பிரதமர் மோடியை பிரிக்ஸ் மாநாட்டிற்கு அழைப்பதே சீனாவின் நோக்கம். அதன் காரணமாகவே வாங்க் இ இந்தியா வந்துள்ளார். விரைவில் ஜெய்சங்கர் பெய்ஜிங் செல்வார். அதை தொடர்ந்து பல்வேறு சீன தலைவர்கள் இந்தியா வருவார்கள் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் சீனாவிற்கு என்ன பயன், ஏன் சீனா இந்தியாவிடம் இறங்கி செல்ல வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்திய பிரதமர் மோடி, பெய்ஜிங் செல்வது அமெரிக்காவிற்கு பெரிய மெசேஜாக பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் நாடுகளின் ஒற்றுமையை இது பறைசாற்றும்.

சீனாவிற்கு என்ன பயன்?
ரஷ்ய போரால் சீனா மீது அமெரிக்கா கோபத்தில் உள்ளது. சீனா மீது பொருளாதார தடைகளை விதிப்போம் என்றும் கூட அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பிரதமர் மோடி சீனா சென்றால் அது அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாடாக பார்க்கப்படும். அதோடு ஏற்கனவே ரஷ்ய போரில் இந்தியா அமெரிக்காவின் பேச்சை கேட்கவில்லை. இப்போது ஒருவேளை இந்திய பிரதமர் மோடி சீனாவிற்கு சென்றால்.. அது மேற்கு உலகிற்கு எதிராக இந்தியா - ரஷ்யா - சீனாவின் கூட்டமைப்பு போல கருதப்படும்.

ரஷ்யாவிற்கு என்ன பயன்?
இந்த அழைப்பிற்கு பின் ரஷ்யா இருப்பதாக கூறப்படுகிறது. சீனா மூலம் பிரதமர் மோடியை பெய்ஜிங் வரவைக்க ரஷ்யா முயல்வதாக கூறப்படுகிறது. ஏனென்றால் பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யாவும் உள்ளது. ஒருவேளை இந்த கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்று அதில் மோடி கலந்து கொண்டால், ரஷ்யாவிற்கு ஆதரவான நிலைப்பாடாக அது கருதப்படும். ஏனென்றால் புடின் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார். மேற்கு உலக நாடுகளுக்கு எதிராக RIC (Russia-India-China) நாடுகளின் ஒற்றுமையை இது பறைசாற்றும். இதனால் ரஷ்யா அரசியல் ரீதியாக தனித்து விடப்படவில்லை என்ற மெசேஜும் அமெரிக்காவிற்கு செல்லும்.

மோடி செல்வாரா?
இதை கணக்கில் வைத்தே பிரதமர் மோடியை சீனா அழைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மோடி இதில் நேரடியாக கலந்து கொள்வது சந்தேகமே. ஏனென்றால் சீனாவை ஆதரிக்க போய் அமெரிக்காவின் பகையை இந்தியா சம்பாதித்துக்கொள்ளாது. அதோடு கடைசியாக இந்தியா பிரிக்ஸ் மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்டது 2019ல் பிரேசிலில் நடைபெற்ற போது. அதன்பின் இந்திய பிரதமர் மோடி நேரடியாக பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கவில்லை. ஆன்லைன் மூலமே பங்கேற்றார்.

இறங்கி வரும் சீனா
இந்த நிலையில்தான் பிரதமர் மோடியை சீனா வரவைக்கும் விதமாக பெய்ஜிங் இறங்கி வந்துள்ளது. ஆனால் எல்லை பிரச்சனையில் சுமுக தீர்வு கண்டால் மட்டுமே இந்திய பிரதமர் மோடி பெய்ஜிங் வருவார் என்று இந்திய தரப்பு சீன அமைச்சர் வாங்க் இயிடம் சொன்னதாக தகவல்கள் வருகின்றன. அதாவது தற்போது நிலவும் பிரச்னையை முடிவிற்கு கொண்டு வாருங்கள்,. பின்னர் பார்க்கலாம்.. என்று இந்தியா சீனாவிடம் சொன்னதாக தகவல்கள் வருகின்றன. அதோடு வாங்க் இ இந்தியா வந்த போது அவரை சந்திக்க பிரதமர் மோடி மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கஷ்டமான காலம்
இந்தியா இப்போது ராஜாங்க ரீதியாக கஷ்டமான சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. முதல் முடிவு, சீனாவின் அழைப்பை புறக்கணித்து, இரண்டு நாட்டுக்கு அமைதிக்கான வாய்ப்பை நழுவ விடுவது. இல்லையென்றால், இரண்டாவது முடிவு சீனாவின் அழைப்பை என்று மோடி பெய்ஜிங் செல்வது. ஆனால் இது மேற்கு உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதிக்ககாரணமாக அமைந்துவிடும். இதனால் இரண்டு முடிவுகளுக்கும் இடையில் நடுநிலையான ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இந்தியா உள்ளது.












Click it and Unblock the Notifications