உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய கர்நாடகா! காவிரியில் 7 நாட்களுக்கு 12,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு
டெல்லி: தமிழகத்திற்கு ஏன் நீரை திறந்துவிடவில்லை என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், கடவுள் தந்த மழை நீரை அணைகளில் மொத்தமாக சேமிக்க முடியாத காரணத்தினாலேயே திறந்துவிட்டுள்ளீர்கள் என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் திறக்க உத்தரவிட்டதே மிக மிக குறைவான நீர் தான் என்றும் ஆனால் அதையும் திறந்துவிடாமல் இருந்துள்ளீர்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் அடுத்த 7 நாட்களுக்கு காவிரியில் 12,000 கன அடி நீர் திறந்துவிடவேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
காவிரியில் நீர் திறந்து விட கர்நாடாக அரசுக்கு உத்தரவிட்ட வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல திமுக சார்பாகவும் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் கர்நாடகா அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான அளவு நீரை விடுவிக்க கர்நாடகா அடாவடி செய்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுகளையும் மதிக்காமல் கர்நாடகா தண்ணீரை திறப்பது இல்லை. உபரி நீரை மட்டுமே திறந்து விட்டு வருகிறது.
கர்நடகாவின் இந்த அடாவடிப் போக்குக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியில் நீர் திறந்து விட கர்நாடாக அரசுக்கு உத்தரவிட்ட வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சிஎஸ் வைத்தியநாதன், ஜி உமாபதி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.. அதேபோல திமுக சார்பாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு வாதம்
இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று 61 வது வழக்காக விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பில், காவிரி நீரை திறந்து விட கூறி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. மழை பெய்ததன் காரணமாக அணை முழுவதும் நிரம்பியதால் கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம் திறந்து விட கூறியதே மிக மிக குறைவான தண்ணீர் தான். ஆனால் அதனையும் கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. எனவே தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு கர்நாடக அரசு சார்பில், மாநிலத்தில் இந்த முறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவியது. அதனாலேயே தண்ணீர் திறந்துவிடவில்லை என வாதிடப்பட்டது. இப்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.
நீதிபதிகள் சரமாரி கேள்வி
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கர்நாடக அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினர். காவிரி மேலாண்மை ஆணையம் கூறியும் ஏன் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை. இப்போது திறந்து உள்ளோம் என சொல்கிறீர்கள். ஆனால் கடவுள் தந்த மழை நீரை அணைகளில் மொத்தமாக சேமிக்க முடியாது என்ற காரணத்தினாலேயே தான் இப்போது கூட திறந்துவிட்டுள்ளீர்கள்.. என்று கூறினர். அப்போது தமிழக அரசு சார்பில், காவிரி மேலாண்மை ஆணையம் திறக்க உத்தரவிட்டதே மிக மிக குறைவான நீர் தான்.
12,000 கன அடி நீர் திறக்க உத்தரவு
ஆனால் அதையும் திறந்துவிடாமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்துகிறது என்று வாதம் வைக்கப்பட்டது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் 12,000 கன அடி நீர் திறக்க உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டும் என வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், இப்போது மழை பெய்து கொண்டிருப்பதனால் இந்த வழக்கை ஏன் அடுத்த வாரம் விசாரிக்கக் கூடாது என்று கூறி அடுத்த வாரத்திற்கு (வரும் 24 ஆம் தேதிக்கு) ஒத்தி வைத்தனர். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு அடுத்த ஒரு வாரத்திற்கு 12,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டனர்.
நீர் திறக்க உத்தரவிட வேண்டும்
முன்னதாக தமிழக அரசு தாக்கல் செய்து இருந்த மனுவில் கூறபட்டு இருந்ததாவது:- ஜூலை 30 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்குக் உத்தரவிட்டது.
நடப்பு மாதம் 2 ஆம் தேதி காலை 8:00 மணி வரை கர்நாடக மாநிலம் அதனைப் பின்பற்றவில்லை. உத்தரவுகள் இருந்தபோதிலும், ஜூலை 29 முதல் ஆகஸ் 2 வரை பிலிகுண்டுலுவில் பதிவான மொத்த நீர்வரத்து 158 முதல் 530 கனஅடி என்ற அளவிலேயே இருந்தது. எனவே, கர்நாடகா அந்த உத்தரவுகளை வேண்டுமென்றே பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. நடப்பு ஆண்டில் போதுமான நீர்வரத்து இருந்த போதிலும், நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும், கர்நாடக அரசு மதிக்க தவறி விட்டது.
ஏதேதோ காரணங்களைக் கூறி, முழுமையாக நீரை திறக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து வினாடிக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி, தண்ணீரை திறந்துவிட்டு, அது பிலிகுண்டுலு எல்லையை வந்தடைவதை கர்நாடக அரசு உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவை, ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒரு முறை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நேரடியாக கண்காணிக்க வேண்டும். பிலிகுண்டுலுவில் நீர்வரத்து இருப்பதை உறுதி செய்ய, கர்நாடகாவிற்கு தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என்று கூறபட்டு இருந்தது.
தண்ணீர் திறந்த கர்நாடகா
திமுக சார்பில் அக்கட்சியின் விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான இன்று விசாரணை நடைபெறுகிறது. இதற்கிடையே, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி அணையில் இருந்து தற்போது தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி இவ்விரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 14,600 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 12,896 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
