2 நாள் தானே இருக்கு.. இடிக்குதே! டெல்லிக்கு இன்று அவசரமாக புறப்படும் ஆளுநர் ரவி.. ஒரே குழப்பம்!
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி இன்று காலை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பல்வேறு முக்கிய விவகாரங்களை மனதில் வைத்து அவர் டெல்லிக்கு செல்வதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கு ஆளும் திமுக அரசுக்கும் இடையிலான மோதல் இன்னும் குறையவில்லை. தமிழ்நாடு அரசு நீட் விலக்கு மசோதா தொடர்பான விவகாரத்தில் ஆளுநரை கடுமையாக எதிர்த்தது.
இதனால் ஆளுநருக்கும், திமுக தரப்பிற்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ஆளுநர் ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.
2 வருடம் முன் நடந்த அந்த சம்பவம்.. 228 நாள் கசப்பு! ஆளுநர் ரவிக்கு நன்றி சொன்ன முரசொலி! ட்விஸ்ட்

ஆளுநர் ரவி மோதல்
ஆனால் இந்த விவகாரத்தில் மோதல் முடிந்தாலும் இன்னும் பல விவரங்களில் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் மோதல் உள்ளது. துணை வேந்தர்கள் நியமன விவகாரத்தில் இன்னும் மோதல் நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. இது போக துணை வேந்தர்கள் மாநாடு நடத்தியது என்று பல விஷயங்கள் அரசு தரப்பிற்கு ஆளுநர் மீது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

பட்டமளிப்பு விழா
நேற்று முதல்நாள் கோவை பாரதியார் பல்கலை, 37வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் ஆளுநர் புதிய கல்வி கொள்கையால், தமிழ் மொழியை பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக கற்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் சிறந்த மொழி. அதே சமயம் அனைத்து மொழிகளையும் மத்திய அரசு மதிக்கிறது என்று ஆளுநர் ஆர். என் ரவி பேசி இருந்தார்.

டெல்லி பயணம்
இந்த நிகழ்வில் இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன் முடியும் கலந்து கொண்டார். இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி இன்று காலை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பல்வேறு முக்கிய விவகாரங்களை மனதில் வைத்து அவர் டெல்லிக்கு செல்வதாக கூறப்படுகிறது. காலை 10 மணிக்கு டெல்லி புறப்படும் அவர் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.

காரணம்
பிரதமர் மோடியை இவர் சந்திக்க வாய்ப்பு குறைவு. டெல்லியில் நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்திடம் உள்ளது. இந்த நிலையில்தான் ஆளுநர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னை பல்கலை கழக பட்டமளிப்பு விழா மே 16ம் தேதி நடக்கிறது. இந்த கூட்டம் நடக்க 2 நாட்களே உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதில் கலந்து கொள்ளும் முன் ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு சென்றுவிட்டு திரும்பும் திட்டத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுதான் பயணத்திற்கு காரணமோ என்று கேள்வி எழுந்துள்ளது.

குழப்பம்
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு சென்றார். அப்போது உள்துறை அமைச்சரை சந்தித்தார். இன்னும் பல அமைச்சர்களை சந்தித்தார். இப்போது திடீரென மீண்டும் அவர் டெல்லிக்கு செல்கிறார். இலங்கையில் இருந்த பொருளாதார நிலை காரணமாக அகதிகள் தமிழ்நாடு வர தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், எல்லை பாதுகாப்பு குறித்து, முன்னாள் உளவுத்துறை அதிகாரியான ரவி உள்துறை அமைச்சகத்திடம் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் ஆளுநர் ரவி உண்மையில் டெல்லி செல்வது ஏன் என்ற குழப்பம் நிலவி வருகிறது.