"கொங்கு நாடு.." பரபரப்பை கிளப்பிய எல்.முருகன் பயோ டேட்டா! விளக்கம் அளிக்குமா மத்திய அரசு?
டெல்லி: மத்திய அமைச்சராக பதவியேற்று உள்ள எல் முருகன் பயோடேட்டாவில், அவரது மாவட்டத்தை குறிப்பிடுவதற்கு பதில், கொங்குநாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
Recommended Video
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று மிகப்பெரிய அளவுக்கு விஸ்தரிப்பு நடைபெறுகிறது.
இந்த விரிவாக்கத்தின் போது தமிழ்நாட்டில் இருந்து பாஜக தலைவராக இருக்கும் முருகன் மத்திய அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்
மத்திய அமைச்சராக முருகன் அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் , இனிப்புகள் வழங்கியும், இதை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். வானதி சீனிவாசன் உட்பட தமிழ்நாடு பாஜக தலைவர்கள் பலரும் முருகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விவாதங்கள்
ஒருபக்கம் இப்படி மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும் நிலையில் , இன்னொரு பக்கம் மத்திய அரசு புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள பயோடேட்டாவில், முருகன் பெயருக்கு பின்னால் குறிப்பிடப்பட்ட விபரக் குறிப்பு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

பயோ டேட்டா விவரம்
ஒவ்வொரு அமைச்சருக்கும் பின்னாடியும் அவர்களது கல்வித் தகுதி , வயது, எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் இடம்பெற்றிருக்கிறது. அதில் முருகன் பெயருக்குப் பின்னால் அவர் வழக்கறிஞராக பணியாற்றியது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தது, அவரது கல்வித் தகுதி வயது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன . ஆனால், மாவட்டம் நாமக்கல் என்பதற்கு பதில் கொங்கு நாடு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாநிலம் தமிழ்நாடு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முருகன் பெயருக்கு பின்னால் மட்டும்
கொங்குநாடு என்று ஒரு மாவட்டம் இல்லாத நிலையில் மத்திய அரசு எவ்வாறு இப்படி ஒரு பயோடேட்டா வெளியிடலாம் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். பிற, அமைச்சர்களுக்கு மாவட்டத்தின் பெயர்களை சரியாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, முருகன் பெயருக்கு பின்னால் மற்றும் கொங்குநாடு என்று மேற்கு மாவட்டங்களை தமிழ்நாட்டில் இருந்து தனியாக பிரிப்பது போல அர்த்தத்துடன் குறிப்பிட்டுள்ளது ஏன் என்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புவதை பார்க்க முடிகிறது.

ஒன்றிய அரசு வார்த்தை
மத்திய அரசை, திமுக தலைவர்கள், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ஒன்றிய அரசு என்று அழைத்து வருகிறார்கள். இதற்கு முருகன் உள்பட பாஜக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பிரிவினைவாதத்தை தூண்டும் என்று கூறினர்.

கொங்கு நாடு ஏன்?
இந்த நிலையில்தான் முருகன் பயோடேட்டாவில், கொங்குநாடு என்று தமிழ்நாட்டுக்குள் ஒரு மண்டலத்தை தனியாக பிரித்தது போன்ற நோக்கத்துடன் ஒரு வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஒன்றிய அரசு என்ற வார்த்தைக்கு பதிலடியாக வேண்டும் என்று செய்யப்பட்டதா, அல்லது கவனக் குறைவால் இது செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. இதில், மத்திய அரசுதான், விளக்கம் தர வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications