மோடிக்கு ‘நோ’.. அம்பானியின் ஜாம்நகருக்கு ‘எஸ்’! அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோவின் ஷாக் பயணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் இந்தியாவுக்கு வந்துவிட்டு, நாட்டின் தலைநகரான டெல்லிக்குச் செல்லாமல் திரும்புவது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அக்டோபர் 17 முதல் 22 வரை இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

வழக்கமாக வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வந்தால் டெல்லியில் பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோரைச் சந்திப்பதுதான் வழக்கம். ஆனால், ரூபியோவின் இந்த இந்திய பயணப் பட்டியலில் டெல்லி பெயரே இல்லை. அதற்குப் பதிலாக, அவர் வர்த்தகத் தலைநகரான மும்பைக்கும், குஜராத்தில் உள்ள ஜாம்நகருக்கும் செல்லவிருக்கிறார். அதேபோல உஸ்பெகிஸ்தானிலும் தலைநகர் தாஷ்கண்ட்டைத் தவிர்த்துவிட்டு, அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சமர்கண்டிற்குச் செல்கிறார்.

Marco Rubio

அகமதாபாத் விட்டு ஜாம்நகர் பக்கம் திரும்பிய கவனம்

2014-ல் நரேந்திர மோடி பிரதமரான பிறகு, சர்வதேச தலைவர்களை குஜராத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கமாக மாறியது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவின் ஜி ஜின்பிங், ஜப்பானின் மறைந்த பிரதமர் ஷின்சோ அபே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எனப் பலரும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், இப்போது முதல்முறையாக ஒட்டுமொத்த சர்வதேச பார்வையும் ஜாம்நகர் பக்கம் திரும்பியுள்ளது.

ஜாம்நகர் என்றாலே நினைவுக்கு வருவது இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் சாம்ராஜ்யம்தான். உலகின் மிகப்பெரிய ஒற்றை வளாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Refinery) இங்குதான் அமைந்துள்ளது. மார்கோ ரூபியோ இங்கு சென்று மூத்த அதிகாரிகளையும் தொழில்துறைப் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார்.

இதன் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய எண்ணெய் அரசியல்

ரூபியோவின் இந்த ஜாம்நகர் பயணம் சும்மா ஒரு பார்வைக்காக மட்டும் அமையவில்லை; இதன் பின்னணியில் மிகப்பெரிய சர்வதேச அரசியலும் வர்த்தகமும் அடங்கியுள்ளன:

உக்ரைன் போருக்குப் பிறகு, இந்தியா ரஷியாவிடமிருந்து குறைந்த விலைக்கு அதிகளவில் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. அதில் கணிசமான அளவு ஜாம்நகர் ஆலையில்தான் சுத்திகரிக்கப்படுகிறது. இதற்கிடையில், ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு நிலுவையில் உள்ளது.

அமெரிக்காவின் தென் எல்லையான டெக்சாஸில் சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்பில் பிரம்மாண்ட சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும் என்றும், அதில் ரிலையன்ஸ் முதலீடு செய்யவுள்ளதாகவும் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை முன்னெடுப்பது குறித்துப் பேசப்படலாம்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான நேரடி வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் தேக்கமடைந்துள்ளன.

சமீபத்தில்தான் அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், முகேஷ் அம்பானியை "இந்தியாவின் உண்மையான பாஸ்" என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு அடுத்த சில நாட்களிலேயே அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சரே நேராக அம்பானியின் சொந்த தொழில் தளமான ஜாம்நகருக்குச் செல்வது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசு சொல்வது என்ன?

வெள்ளை மாளிகை ரூபியோவின் பயண விவரங்களை அக்டோபர் 13 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அவர் இந்தியாவுக்குள் எந்தத் தேதியில் வந்து இறங்குவார் என்ற துல்லியமான விவரம் முழுமையாக வெளிவரவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இருதரப்பு நலன் சார்ந்த பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும்" என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டார்.

முன்னதாக, கடந்த மே மாதம் இந்தியா வந்திருந்த மார்கோ ரூபியோ, கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசா மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி தலைமையகத்திற்குச் சென்றார். அது வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் குறித்த காரசார விவாதங்களை கிளப்பியது. இப்போது டெல்லியையே புறக்கணித்துவிட்டு, ஜாம்நகரில் உள்ள எண்ணெய் ஆலையை மையப்படுத்தி அவர் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி பயணம், இந்தியா-அமெரிக்க வர்த்தகத்திலும் உலக கச்சா எண்ணெய் அரசியலிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+