கனடாவில் கமகமத்த தருமபுரி சாமை கேக்! சிறுதானிய உணவு பற்றி ருசியோடு எழுதிய டாக்டர் ராமதாஸ்
தருமபுரி மாவட்டத்து சாமை கனடாவில் கொடி கட்டி பறப்பதை நினைத்து பிரமித்து போனேன் என்று டாக்டர் ராமதாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தருமபுரி: தருமபுரி மாவட்ட மக்கள் அரிசி உணவுக்கு மாறிவிட்டார்கள். அது அவர்களின் பொருளாதார மேம்பாட்டின் அடையாளம். ஆனாலும், இன்றும் கூட அவர்களின் உணவுப் பட்டியலில் ஒருவேளையாவது சாமை உணவு, களி, கொள்ளு ரசம் ஆகியவை இடம் பெறும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் சிறு தானிய உணவின் சுவை, சத்துக்கள் பற்றி ருசியாக எழுதியுள்ளார். வெகுவிரைவில் சிறுதானியங்கள் உலகெங்கும் உள்ள சாப்பாட்டு மேசைகளை ஆளும் காலம் வரும் என்றும் பதிவிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்தும், சிறுதானிய உணவு வகைகளின் சிறப்புகள் குறித்தும் முகநூல் பதிவில் விரிவாக விளக்கியிருந்தேன். அப்போது சிறுதானிய உணவு வகைகள் தொடர்பான சில சுவையான நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. அவற்றை பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

பல ஆண்டுகளுக்கு முன் நானும், எனது துணைவியாரும் கனடா நாட்டிற்கு சென்றிருந்தோம். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் நாங்கள் கலந்து கொண்டோம். ஒரு நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அங்குள்ள தமிழ்நாடு மற்றும் ஈழத்தைச் சேர்ந்த தமிழ்ச் சொந்தங்கள் எங்களை அழைத்துச் சென்று கேக் மற்றும் தேநீர் வாங்கிக் கொடுத்து உபசரித்தனர்.
கேக் மிகவும் சுவையாகவும், மனதைத் துளைக்கும் மணம் கொண்டதாகவும் இருந்தது. அந்த கேக் எதைக் கொண்டு செய்யப்பட்டது என்றும், அதன் மணத்தைக் கொண்டு அதை கண்டுபிடிக்க முடிகிறதா? என்றும் தமிழ்ச் சொந்தங்கள் கேட்டனர். ஆனால், எங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சுவையும், மணமும் மிகவும் நன்றாக இருந்தது என்று மட்டும் கூறினேன்.
அதைத் தொடர்ந்து அந்த கேக் குறித்து விளக்கிய கனடா தமிழ்ச் சொந்தங்கள், '' அந்த கேக் சாமை என்ற சிறுதானியத்திலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் விளையும் சாமையைக் கொண்டு தான் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே தருமபுரியிலிருந்து சாமை தானியத்தை நாங்கள் கனடாவுக்கு இறக்குமதி செய்கிறோம்'' என்று கூறினார்கள். அதைக் கேட்டு வியந்து போனேன். தருமபுரி மாவட்டத்து சாமை கனடாவில் கொடி கட்டி பறப்பதை நினைத்து பிரமித்து போனேன்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு காலத்தில் சாமை சோறும், கொள்ளு ரசமும் தான் முதன்மை உணவாக இருந்து வந்தது. அதற்குக் காரணம் அப்போது அரிசி உணவு சாப்பிடும் அளவுக்கு அங்குள்ள மக்களின் பொருளாதார நிலை உயரவில்லை. அந்த காலத்தில் அங்கு நடைபெற்ற வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டங்களில் பன்கேற்றுப் பேசும் போதும் கூட, '' இங்குள்ள மக்கள் இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் சாமை சோறையும், கொள்ளு ரசத்தையும் சாப்பிடுவார்கள். அவர்கள் அரிசி சோறு சாப்பிடும் காலம் எப்போது வரும்?'' என்று வினா எழுப்பியிருக்கிறேன்.

இப்போது தருமபுரி மாவட்ட மக்கள் அரிசி உணவுக்கு மாறிவிட்டார்கள். அது அவர்களின் பொருளாதார மேம்பாட்டின் அடையாளம். ஆனாலும், இன்றும் கூட அவர்களின் உணவுப் பட்டியலில் ஒருவேளையாவது சாமை உணவு, களி, கொள்ளு ரசம் ஆகியவை இடம் பெறும் என்பது சத்தான உணவுகளுக்கு தருமபுரி தமிழர்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் ஆகும்.
கர்நாடகத் தலைநகரமான பெங்களூரில் பணக்கார வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் ஓர் உணவு வகை தவறாமல் இடம்பெறும். அது பிரியாணியோ, கேக்கோ அல்ல. மாறாக சிறுதானிய களி தான். அது தான் பெங்களூர் பணக்கார வீட்டு விருந்துகளில் கட்டாய, கவுரவ உணவு ஆகும்.
இவை அனைத்துமே சிறுதானியங்களின் சிறப்புகளை இந்த உலகம் உணர்ந்து கொண்டு விட்டது என்பதையே காட்டுகிறது. வெகுவிரைவில் சிறுதானியங்கள் உலகெங்கும் உள்ள சாப்பாட்டு மேசைகளை ஆளும் காலம் வரும்.












Click it and Unblock the Notifications