கிறிஸ் கெயில், பொல்லார்ட், டி வில்லியர்ஸ் செய்ய முடியாத சாதனை.. இது 'பினிஷர்' தோனியின் ருத்ரதாண்டவம்
துபாய்: தி கிங் ஆப் பினிஷர், என்றால் அந்த பட்டம் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும். ஆம்.. கிறிஸ் கெயில், பொல்லார்ட், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற காட்டடி மன்னர்கள் செய்ய முடியாத ஒரு அதிரடி சாதனையை பதிவு செய்துள்ளார் கேப்டன் கூல்.
20 ஓவர் கிரிக்கெட் என்றாலே, சிக்சருக்குதான் அங்கே அதிக மதிப்பு. அதிக சிக்சர் அடிப்பவரே அங்கு தலைவன். ஐபிஎல் வரலாற்றை பொறுத்தளவில், அதிக சிக்சர்கள் விளாசி போணியை ஆரம்பித்து வைத்தது வீரேந்திர சேவாக் என்றால், முடித்து வைப்பது என்னவோ தோனிதான்.
என்ன புரியவில்லையா.. விஷயம் இதுதான்.

ஓவர் கணக்கு
ஒவ்வொரு ஓவரிலும் ஒரு வீரர் எத்தனை சிக்சர் விளாசுகிறார் என்று ஒரு கணக்கு வைத்துள்ளார்கள் புள்ளி விவரப் புலிகள். இதற்கும் ஒட்டு மொத்த சிக்சருக்கும் தொடர்பு கிடையாது. இது கணக்கே வேறு. எப்படி என்கிறீர்களா..?

ஓப்பனிங் கிங்
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அதிக சிக்சர் அடித்தவர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் கிறிஸ் கெயில்தான். முதல் ஓவரிலேயே இதுவரை அவர்கள் 12 சிக்சர்கள் அடித்துள்ளனர். ஆட்டத்தின் முதல் பந்தையே சிக்சருக்கு அடிக்க வேண்டும் என்று நினைத்து ஆடுபவர் சேவாக். எனவேதான், கிறிஸ் கெயில் இத்தனை வருடம் ஆடியும், சேவாக் சாதனையை சமன்தான் செய்ய முடிந்துள்ளது.

கிறிஸ் கெயில் ஆதிக்கம்
2வது ஓவரில் 20 சிக்சர், 3வது ஓவரில் 32 சிக்சர், 4வது ஓவரில் 30, 5வது ஓவரில் 28, 6வது ஓவரில் 21, 7வது ஓவரில் 20, 8வது ஓவரில் 18, 9வது ஓவரில் 22 சிக்சர்கள் என வரிசையாக டாப் இடத்தை பிடித்துள்ளது கிறிஸ் கெயில். எஸ்.. தி யுனிவர்சல் பாஸ்தான்.

ரெய்னா, பொல்லார்ட், யூசுப் பதான்
10வது ஓவரில் 13 சிக்சர்கள் அடித்தது குட்டி தல சுரேஷ் ரெய்னா. கிறிஸ் கெயிலும் அதே அளவுக்கு அடித்துள்ளார். 11வது ஓவரில் 20 சிக்சர் அடித்து மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார் கெயில். ஆனால் 12வது ஓவரில் 17 சிக்சர்கள் அடித்து யூசுப் பதான் முதலிடம் பிடித்துள்ளார். 13வது ஓவரிலும் கெயில்தான் ஆதிக்கம். 24 சிக்சர்களை அந்த ஓவரில் இதுவரை அவர் அடித்துள்ளார். 14வது ஓவரில் கிங் கைரன் பொல்லார்ட். அவர் 18 சிக்சர்களை பறக்க விட்டுள்ளார். 15வது ஓவரும் அவருக்கே. 20 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

ஏபி டிவில்லியர்ஸ்
16வது ஓவரில் அதிரடி நாயகன் ஏபி டிவில்லியர்ஸ் 27 சிக்சர்களை வான வேடிக்கை காட்டி டாப் 1ல் உள்ளார். 17வது ஓவரில் கைரன் பொல்லார்ட் 29 சிக்சர்களை பறக்க விட்டு முதலிடம் பிடித்துள்ளார். அப்புறம் என்ன எஞ்சியிருப்பது 3 ஓவர். அங்குதானே பினிஷருக்கு வேலை. ஆம்.. ஒன்றல்ல இரண்டல்ல, 18வது ஓவரில் 34 சிக்சர்களை பறக்க விட்டு அசைக்க முடியாத உயரத்தில் உள்ளார் தோனி.

அசைக்க முடியாத பினிஷர்
19வது ஓவரில் 34 சிக்சர்களுடன் மீண்டும் டிவில்லியர்ஸ் டாப்புக்கு வருகிறார். ஆனால் 20வது ஓவர், அதாவது கடைசி ஓவர், யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சிக்சர்களை பறக்க விட்டு சிக்சர் மன்னராக, உலகின் தலை சிறந்த பினிஷர் என்ற பெயருக்கு ஏற்ப வான வேடிக்கை காண்பித்துள்ளார் தோனி. ஆம்.. நேற்றைய சிக்சருடன் அவர் 20வது ஓவரில் அடித்த சிக்சர் எண்ணிக்கை 50. இதுவரை எந்த வீரரும் இவர் பக்கத்தில் நிற்க முடியவில்லை. கடைசி ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார் தோனி. சமீப காலமாக அவர் தனது முந்தைய ஆட்டத்தை காண்பிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் இதுவரை அவர் படைத்த ரெக்கார்டை முறியடிக்க இனிமேல் பிளேயர்கள் வந்தால்தான் உண்டு.












Click it and Unblock the Notifications