For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலையங்கம்: சிவப்பு கம்பளம் ராஜபக்சேவுக்கு.. சிறுத்தை காடு தமிழ் நிருபர்களுக்கு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருமலையில் இன்று சுப்ரபாதத்துடன் திருப்பள்ளி எழுந்துகொள்ள வேண்டிய வெங்கடாசலபதி பெருமாள், தமிழ் பத்திரிகையாளர்களின் கூக்குரலை கேட்டுதான் எட்டிப்பார்த்திருப்பார். பிரசாத லட்டு தரும் திருப்பதியில், இன்று போலீசாரின் லத்தி அடிதான் தமிழ் பத்திரிகையாளர்களுக்கு கிடைத்தது. அமைதி வேண்டி பக்தர்கள் படையெடுக்கும்திருப்பதி இன்று, அதிகாலையிலேயே அல்லோகலப்பட்டது.

இத்தனைக்கும் அடிப்படை காரணம் திருவாளர்., ராஜபக்சேவின் திருப்பதி வருகைதான். இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த பாவத்தை கழுவவோ என்னவோ, அதிபரான பிறகு இன்றுடன் நான்காவது முறையாக திருமலை வந்து பெருமாளை தரிசனம் செய்துள்ளார் ராஜபக்சே. விவிஐபி அந்தஸ்துடன் அவரை கவனித்துக் கொண்டன மத்திய, மாநில அரசுகள்.

ஆனால், வழக்கம்போல ராஜபக்சே வருகையை எதிர்த்து கருப்பு கொடி காண்பிக்க கிளம்பினர் மதிமுக மற்றும் தமிழ் அமைப்பினர். ஒரு நாட்டின் அதிபருக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்துவதை விடவா தமிழக ஊடகங்களுக்கு வேறு முக்கிய செய்தி இருந்துவிடப் போகிறது. எனவே தமிழ் டிவி சேனல்களை சேர்ந்த மூத்த நிருபர்கள், கேமராமேன்கள் அடங்கிய குழு திருப்பதிக்கு நேற்றிரவே சென்று சேர்ந்தது.

இன்று அதிகாலை பெருமாளுக்கு நடந்த சுப்ரபாத சேவையை பார்த்து தரிசனம் செய்துவிட்டு ராஜபக்சே வெளியே வந்தபோது எங்கிருந்தோ குவிந்த மதிமுக தொண்டர்கள் கறுப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர். 100க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்தது ஆந்திர போலீஸ்.

பல இடங்களில் சோதனை சாவடிகளை போட்டும், லாட்ஜ் ரூம்களில் சோதனை நடத்தியும் தமிழர்களை தடுத்தோமே, எப்படி அவர்கள் ஊடுருவி வந்தனர். தமிழர்களின் சாமர்த்தியத்தின் முன்னால் நாம் டம்மியாகிவிட்டோமே என்று ஆத்திரப்பட்டது காவல்துறை.

அப்போதுதான் அந்த கொடூரம் நிகழ்ந்தது. தங்களது கையாலாகாததனத்தை தமிழ் அமைப்பினர் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் கோபமாக திருப்பினர் ஆந்திர காவல்துறையினர். தங்களது இயலாமையை வீடியோ எடுத்து உலகம் முழுவதும் தமிழ் மீடியாக்கள் காண்பித்துவிடுமே என்ற கோபத்தில் போராட்டத்தை படமெடுத்த வீடியோ காமிராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பத்திரிகையாளர்கள் அடித்து உதைக்கப்பட்டனர். நகரமே அல்லோகலப்பட்டது.

பத்திரிகையாளர்களை தனி வேனிலும், தமிழ் அமைப்பினரை தனி வேன்களிலும் ஏற்றிக்கொண்டு பறந்தது ஆந்திர காவல்படை. இதில் பத்திரிகையாளர்களை மட்டும் திருப்பதிக்கு வெளியே, 8 கிலோ மீட்டர் தூரத்தில் சிறுத்தை உள்ளிட்ட கொடூர விலங்குகள் நடமாடும் வனத்தில் இறக்கி விட்டுவிட்டு போய்விட்டனர் இறக்கமற்ற போலீசார்.டிசம்பர் மாத அதிகாலை குளிரில், விலங்குகள் நடமாடும் அடர்ந்த காட்டில், தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டும் பரிதாபமாக நடந்தே திருப்பதி வந்து சேர்ந்துள்ளனர்.

144 தடையுத்தரவை போட்டிருந்ததை மீறி தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்ததாக காவல்துறை கூறுகிறது. அப்பாவி பத்திரிகையாளர்கள் ஏன் அப்புறப்படுத்தப்பட்டனர் என்பதற்கு காரணம் இல்லை. சீன அரசியல் தலைவர்கள் இந்தியா வரும்போது திபெத்தியர்கள் போராட்டம் நடத்துவது வாடிக்கை. அப்போது எந்த பத்திரிகையாளரும் தாக்குதலுக்கு உள்ளானது கிடையாதே?

Editorial: Attack on Tamil media perons in Andhra pradesh

பத்திரிகையாளர்களையும் உரிய காரணத்துடன் அழைத்துச் சென்றிருந்தால் அவர்கள் மீது வழக்குகள் ஏன் போடவில்லை? ஏன் காவல் நிலையம் அழைத்துச் செல்லாமல் கடும் வனத்தில் தனிமையில் விடப்பட்டனர்? பத்திரிகையாளர்கள் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் யார் பொறுப்பு? எந்த ஒரு சட்ட நடைமுறையும் இல்லாமல் காட்டில் சென்று விடுவதற்கு ஆந்திராவில் காட்டாட்சி நடக்கிறதா? அங்கு தேர்தல் நடந்ததாகவும் அதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் வந்த செய்திகள் வதந்தியா?.

வழக்கமாக இந்த மாதிரி வேலைகள் 'மக்களின் முதல்வர்' ஆட்சியில் தான் நடக்கும். இப்போது, ஆந்திராவுக்கும் இந்த நோய் பரவிவிட்டது.

பத்திரிகையாளர்கள் மீது நடந்துள்ளது அப்பட்டமான மனித உரிமை மீறல். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறையின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்யும் அத்துமீறல் இன்று ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவத்திற்கான எதிர்விளைவுகள் தமிழகத்தில் எதிரொலிக்க தொடங்கிவிட்டன. ஆங்காங்கு தமிழ் அமைப்புகளும், பத்திரிகையாளர்களும் வீதிக்கு இறங்கிவிட்டனர். ஆந்திர வங்கி பொள்ளாச்சியில் முற்றுகைக்குள்ளாகியுள்ளது.

ராஜபக்சேவின் ஆட்சி நடக்கும் இடம் மட்டுமல்ல, அவரது மூச்சு காற்றுபடும் இடத்திலும் அநீதியின் கரங்கள் ஆக்டோபஸ் போல் நீளுமோ..?

English summary
Sri Lankan President Mahinda Rajapaksa offered prayers to Lord Venkateswara temple at Tirumala amidst high tensions as MDMK activists tried to obstruct the President’s convoy. The MDMK workers who reportedly showed black flags to the Sri Lankan President were taken into custody by the Tirumala cops in the early hours on Wednesday. Reporters from Tamil news channels manhandled and taken into a forest by the Andhra cops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X